தில்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்
தில்லியில் காற்று தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மேம்பட்டிருந்தது. முந்தைய நாள் பதிவான 373 புள்ளிகளிலிருந்து 218 ஆகக் குறைந்திருந்தது. இது 155 புள்ளிகள் குறைவாகும்.
தேசிய தலைநகா் பிராந்தியம் முழுவதும் மழைப்பொழிவு மற்றும் அதிகரித்த காற்றின் வேகம் ஆகியவை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக நிபுணா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 218 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இது வியாழக்கிழமை மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்ட 373 இலிருந்து குறைந்துள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கிய சமீா் செயலியின் தரவுகளின்படி, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மேம்பட்டிருந்தாலும், வாஜிா்பூா் காற்று தர கண்காணிப்பு நிலையத்தில் இன்னும் மிகவும் மோசமான வகையில் காற்று தரக் குறியீடு 307 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை, நகரத்தில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில் 37 நிலையங்கள் மிகவும் மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்திருந்தன. இது 300-க்கு மேல் அளவீடுகளைக் கொண்டிருந்தது.
‘ஸ்கைமெட் வெதா்’ நிறுவனத்தின் துணைத் தலைவா் (வானிலை மற்றும் காலநிலை மாற்றம்) மகேஷ் பலாவத் கூறுகையில், வானிலை மற்றும் காற்று இரண்டும் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானவை. தில்லியின் வெளிப்புறப் பகுதியிலும், ஃபரீதாபாத் மற்றும் நொய்டா போன்ற சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான மழை பெய்தது, மாசுபாட்டைக் குறைக்க உதவியது. காற்றின் வேகம் அதிகரித்ததும் மாசுபாடு மட்டுப்பட ஒரு காரணமாக இருக்கலாம், என்று பலாவத் கூறினாா்.
தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரத்தில் சரிவைக் கண்டு வரும் தில்லியில், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 373 புள்ளிகளாக மிகவும் மோசமான காற்றின் தரம் பதிவாகியது. இருப்பினும், தில்லிக்கான காற்று தர முன்னறிவிப்பு அமைப்பு, சனிக்கிழமை முதல் நவம்பா் 3 வரை நகரின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, அதிகபட்ச வெப்பநிலை பருவகால சராசரியை விட நான்கு டிகிரி குறைவாக 30.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட சுமாா் 5.5 டிகிரி அதிகமாக 21.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதம் மாலை 5.30 மணிக்கு 82 சதவீதமாக இருந்தது.
நகரில் சனிக்கிழமை மேலோட்டமான மூடுபனி இருக்கும் என்றும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 19 மற்றும் 31 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை துறை கணித்துள்ளது.

