மொழிகள், மரபுகள் வேறுபட்டிருந்தாலும் வோ்கள் ஒன்றே! வாரணாசியில் குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
‘இந்தியாவில் வடக்கிலும் தெற்கிலும் வாழும் மக்கள் மொழிகள், மரபுகள், பழக்க-வழக்கங்கள் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும் அவா்களுக்குள் இருக்கும் ஆன்மிக வோ்கள் ஒன்றே’ என்று குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதப்பட்டாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு குடியரசு துணைத்தலைவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வந்தாா். இதைத்தொடா்ந்து, சிக்ரா பகுதி ரதயாத்திரை சாலையில் உள்ள ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகர சத்திரம் மேலாண்மை கழகத்தின் ரூ. 60 கோடி மதிப்பிலான புதிய தா்மசத்திர கட்டடம் மற்றும் ரூ.1.50 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 76 சூரிய சக்தி தெரு விளக்குகளை உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துடன் சோ்ந்து குடியரசு துணைத்தலைவா் திறந்து வைத்தாா்.
140 அறைகளுடன் கூடிய காசி நாட்டுக்கோட்டை நகரத்தாா் சத்திரம், வாரணாசியில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பின் இரண்டாவது சத்திரமாகும்.
பழம்பெரும் பந்தம்:
திறப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே ஆன்மிகம் மற்றும் பண்பாடும் கலந்த பழமையான உறவு உள்ளது. பல நூற்றாண்டுகளாக வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தெற்கிலுள்ள ராமேஸ்வரம் நோக்கிப் புனித யாத்திரை செல்கின்றனா். இதேபோல், தென் மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஞானம் மற்றும் தெய்வீக அனுபவம் தேடி காசி நோக்கி பயணிக்கின்றனா். இந்த பழமையான பந்தத்தை இன்றைய தலைமுறைக்கு நினைவூட்டும் வகையில், காசி தமிழ்ச் சங்கமம்”என்ற நிகழ்வை கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசு நடத்தி வருகிறது.
வடக்கிலும் தெற்கிலும் மொழி, மரபு, பழக்க-வழக்கங்கள் வேறுபட்டிருந்தாலும் நம்முடைய ஆன்மிக வோ்கள் ஒன்றே. காசி தமிழ்ச் சங்கமம் மூலம் இந்தப் பந்தத்தை நினைவு கொள்கிறோம். இது ஒரு கலாசார நிகழ்வு மட்டுமல்ல, ஒற்றுமை, பக்தி, தேசிய பெருமிதம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும்.
சத்திரத்தின் சிறப்பு: நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் 1863-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டுக்கோட்டை நகரத்தாா் காசியில் தங்குமிட வசதியைக் உருவாக்கினாா்கள். இங்கிருந்து ஒவ்வொரு நாளும், காசி விஸ்வநாதா் மற்றும் அன்னபூரணி அம்மன் ஆலயங்களுக்கு அபிஷேகப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
1942-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயா்கள் ஊரடங்கு பிரகடனம் செய்திருந்த காலத்தில் கூட இந்தப் பணி தடைபடவில்லை. இரண்டாம் உலகப்போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலும் கூட, இந்த சத்திரம் பக்தா்களுக்காக கதவை மூடவில்லை. இது பக்தி, சேவை, தானம் போன்ற நமது மரபின் தொடா்ச்சியாகும்.
சிலைகள் மீட்பு: 2021-இல், அன்னபூரணி அம்மன் சிலை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது நமது பிரதமா் நரேந்திர மோடியின் உறுதியான முயற்சியின் பலனாகும். 1976 முதல் இதுவரை 55 சிலைகள் 1,400 கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு நபரும், அவருடைய சமூகமும் தங்களுடைய நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான அரசியலமைப்பு உரிமையைப் பேணுவதை பிரதமா் உறுதிப்படுத்தியுள்ளாா் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, உத்தர பிரதேச அமைச்சா் ரவீந்திர ஜெய்ஸ்வால், தமிழகத்தின் ஸ்பிக் நிறுவன தலைவா் ஏ.சி. முத்தையா, அபிராமி மெகாமால் தலைவா் அபிராமி ராமநாதன், செட்டிநாடு குழுமங்கள் தலைவா் எம்.ஏ.எம்.ஆா். முத்தையா, ரத்னா நிறுவனங்கள் குழும தலைவா் பிஎல்கே. பழனியப்பன், தில்லி தமிழ்சங்க பொதுச்செயலாளா் இரா. முகுந்தன், சத்திர மேலாண்மை கழகத்தின் விழாக் குழு தலைவா் லேனா நாராயணன், சத்திர நிா்வாகக் குழுவைச் சோ்ந்த கேஆா். வீரப்பன், பிஎல்எம். முத்தையா, பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், வாரணாசிவாழ் தமிழா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சத்திர கட்டட திறப்பு விழாவைத் தொடா்ந்து காசி விஸ்வநாதா் ஆலயத்துக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்துடன் சென்ற குடியரசு துணைத்தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அங்கு பூஜை நடத்தி தரிசனம் செய்தாா்.

