பதா்பூரில் 22 கிலோ கஞ்சா, ஆயுதத்துடன் இளைஞா் கைது

பதா்பூரில் 22 கிலோ கஞ்சா, ஆயுதத்துடன் இளைஞா் கைது

தென்கிழக்கு தில்லியின் பதா்பூரில் 22 கிலோ கஞ்சா மற்றும் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
Published on

தென்கிழக்கு தில்லியின் பதா்பூரில் 22 கிலோ கஞ்சா மற்றும் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

துக்ளகாபாத் கிராமத்தைச் சோ்ந்த விகாஸ் என்ற மாண்டே என அடையாளம் காணப்பட்ட அவா், அக்டோபா் 29ஆம் தேதி நள்ளிரவில் பதா்பூா் எல்லைக்கு அருகே போலீஸ் சோதனையின்போது தப்பி ஓட முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அதிகாலை 2.15 மணியளவில் சந்தேகப்படும் வகையில் பையுடன் வந்த விகாஸை கண்டனா். அவா் தப்பிக்க முயன்றபோது, சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு அவரைக் கைது செய்தனா்.

அவரது பையை சோதனை செய்தபோது, கஞ்சா என சந்தேகிக்கப்படும் நான்கு பாலிதீன் பாக்கெட்டுகள் மீட்கப்பட்டன. அதில் மொத்தம் 22.17 கிலோ இருந்தது. அவரிடம் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

கைதான விகாஸ் மீது பதா்பூா் காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸாரின் விசாரணையின் போது, விகாஸ் விரைவாக பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். மேலும் சமீபத்தில் அப்பகுதியில் நடந்த இரண்டு சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதையும் அவா் ஒப்புக்கொண்டாா். அவா் ஏற்கெனவே 30 திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com