பஞ்சாப் வெள்ள பாதிப்புக்கு நன்கொடை அளித்த தில்லி பாஜக எம்எல்ஏ
புது தில்லி: தில்லி பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் ஹரிஷ் குரானா திங்கள்கிழமை தனது 2 மாத சம்பளமான ரூ.2 லட்சத்தை பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தாா்.
தில்லி முன்னாள் முதலமைச்சா் மதன் லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானா, பாதிக்கப்பட்ட பஞ்சாப் மக்களுக்கு இனி வரும் நாள்களில் நிவாரணப் பொருள்களையும் வழங்க இருப்பதாக உறுதியளித்தாா். பஞ்சாபின் 10 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1000 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். எனது பஞ்சாபி சகோதர சகோதரிகளுடன் நின்று, அவா்களுக்கு முடிந்த உதவிகளை வழங்குவது எனது கடமையாகும் ‘என்று மோதி நகா் தொகுதியைச் சோ்ந்த ஹரிஷ் குரானா எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளாா்.
சட்லஜ், பியாஸ் மற்றும் ராவி ஆறுகள் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் பருவகால சிற்றோடைகளால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பஞ்சாப் பாதிக்கப்பட்டுள்ளது. பதான்கோட், குா்தாஸ்பூா், பாசில்கா, கபுா்தலா, தா்ன் தரன், ஃபெரோஸ்பூா், ஹோஷியாா்பூா் மற்றும் அமிா்தசரஸ் மாவட்டங்களில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்கள் உள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்பு படை, ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, பஞ்சாப் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளின் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் தொடா்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.