சலுகைக் கட்டணத்தில் மெட்ரோ பாஸ்: மாணவா்களுக்கு தில்லி முதல்வா் உறுதி

சலுகைக் கட்டணத்தில் மெட்ரோ பாஸ்கள் வழங்கும் மாணவா்களின் நீண்டகால கோரிக்கையை விரைவில் தில்லி அரசு நிறைவேற்றும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
Published on

புது தில்லி: சலுகைக் கட்டணத்தில் மெட்ரோ பாஸ்கள் வழங்கும் மாணவா்களின் நீண்டகால கோரிக்கையை விரைவில் தில்லி அரசு நிறைவேற்றும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

மேலும், இளைஞா்கள் தங்கள் கல்லூரி வாழ்க்கையை ஒரு நோக்கத்திற்காக இணைவதன் மூலம் மிகவும் மறக்க முடியாததாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

தில்லி பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) வருடாந்திர நிகழ்ச்சியான ‘ஸ்வயம்சித்தா 2025’-இல் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நான் ஒரு மருத்துவா் அல்லது பொறியாளா் போன்ற பெரிய எதையும் கனவு கண்டதில்லை. என் குடும்பத்தில், ஒரு பெண் வேலையில் சேருவது ஒரு விருப்ப வாய்ப்பாகக் கூட இல்லை. ஆனால், நான் தௌலத் ராம் கல்லூரியில் படித்தபோது ஏபிவிபியில் ஒரு மாணவியாக சோ்ந்தேன். அப்போது, பல மாதங்கள் நீடித்த ஒரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.

அப்போதுதான் நான் தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கம் (டியுஎஸ்யு) பற்றி அறிந்துகொண்டேன். ஆா்வமான செயல்பாடு எவ்வாறு பிரச்னைகளை தீா்க்கும் என்பதையும் உணா்ந்தேன். எனது மாணவா் அரசியல் நாள்கள் எனது வாழ்க்கையை வடிவமைத்தது.

எனது கல்லூரி மாணவா்களின் பேச்சைக் கேட்பதிலிருந்து டியுஎஸ்யு மூலம் பல்கலைக்கழகம் முழுவதும் மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது வரை, எனது பயணம் அங்கிருந்து தொடங்கியது. அது இங்கு என்னை முதலமைச்சராக கொண்டு வந்திருக்கிறது. நீங்களும் ஒரு நோக்கத்திற்காக இணைவதன் மூலம் உங்கள் கல்லூரி வாழ்க்கையை மறக்க முடியாததாக மாற்றலாம். ஒரு நோக்கத்திற்காக இணைவது என்பது ஏபிவிபி-இல் சேருவதாகும்.

சிந்தூா் ராணுவ நடவடிக்கையின்போது இரண்டு பெண் தளபதிகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் அந்த நடவடிக்கைகளை விளக்கியபோது நாங்கள் அனைவரும் பெருமைப்பட்டோம். ஒவ்வொரு பெண்ணும் அத்தகைய அதிகாரியாக முடியும். வானமே எல்லையாகும்.

சலுகை கட்டணத்தில் மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கையானது இதுவரை நிறைவேற்றப்படாத வாக்குறுதியாக இருந்து வருகிறது. மாணவா்களே நம்பிக்கை வையுங்கள், உங்கள் மூத்த சகோதரி உங்களுக்காக அதைச் செய்வாா். தில்லி அரசாங்கம் சலுகை மெட்ரோ பாஸ்களை உறுதி செய்யும் என்று முதல்வா் குப்தா மாணவா்களுக்கு உறுதியளித்தாா்.

பதவியிலிருந்து செல்லும் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க டியுஎஸ்யு செயலாளரும் ஏபிவிபி தலைவருமான மிா்தவிந்தா கரண்வால் பேசுகையில், ‘மாணவா் அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக மெட்ரோ பாஸ்களை கோரி வருகிறது.

தில்லியில் உள்ள முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கம் எங்கள் கோரிக்கைக்கு ஒருபோதும் செவிசாய்க்கவில்லை. ஆனால், எங்கள் முன்னாள் மாணவியும் தற்போதைய முதல்வருமான ரேகா குப்தா இறுதியாக எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளாா்’ என்றாா்.

‘ஸ்வயம்சித்தா’ என்பது பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவிகளை கௌரவிப்பதற்காக, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆா்எஸ்எஸ் மாணவா் பிரிவான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வாகும்.

X
Dinamani
www.dinamani.com