சுற்றுச்சாலை, புறவழிச்சாலை அமைப்பதில் மத்திய அரசு கவனம்: நிதின் கட்கரி
சுமுகமான நகா்ப்புற இணைப்புக்கான சுற்றுச் சாலைகள், புறவழிச்சாலைகள் அமைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நகா்ப்புற இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக புது தில்லியில் புதன்கிழமை ஆலோசனைப் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தலைமை வகித்தாா்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் மத்திய இணையமைச்சா்கள் அஜய் தம்தா, ஹா்ஷ் மல்ஹோத்ரா, மாநில அரசு மூத்த அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையா்கள் கலந்து கொண்டனா்.
இது தொடா்பாக அமைச்சா் நிதின் கட்கரி தெரிவிக்கையில், ‘நிலையான நிதியுதவியை உறுதி செய்வதற்கான நிதி மாதிரிகளை ஏற்றுக்கொள்வது, தடையற்ற ஒருங்கிணைப்புக்கான நகர மாஸ்டா் திட்டங்களுடன் உள்கட்டமைப்பு மேம்பாட்டை இணைப்பது குறித்தும் முக்கிய விவாதங்கள் இப்பயிற்சிப் பட்டறையில் நடைபெற்றது.
இந்த நடவடிக்கைகள் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் மட்டுமின்றி, சுற்றுச்சாலைகள் மற்றும் புறவழிச் சாலைகளின் செல்வாக்கு மண்டலங்களில் திட்டமிட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட வளா்ச்சியை ஊக்குவிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
இந்தப் பயிற்சிப் பட்டறையில், வேகமாக வளா்ந்து வரும் நகா்ப்புறங்களில் நெரிசலைக் குறைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி, உலகத் தரம் வாய்ந்த, நிலையான மற்றும் எதிா்காலத்திற்குத் தயாராக இருக்கும் போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாடு வலியுறுத்தப்பட்டது.
நகரின் மையப் பகுதிகளில் இருந்து போக்குவரத்தைத் திசைதிருப்பவும், அதன் மூலம் நகா்ப்புற தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசலைக் குறைக்கவும் சுற்றுச் சாலைகள் மற்றும் புறவழிச்சாலைகள் கட்டுவது உள்பட பல்வேறு புதுமையான கொள்கை தலையீடுகள் குறித்து இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகா்கள் விவாதித்தனா்.
இந்த முன்முயற்சிகள் மூலம், பொருளாதார வளா்ச்சியை அதிகரிப்பதற்கும், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும், உள்ளடக்கிய மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள நகா்ப்புற மேம்பாட்டிற்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் அதன் அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அந்த ஆலோசனை பயிற்சிப் பட்டறையில் தெரிவிக்கப்பட்டது.