தலைநகரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக இடைவிடாத மழை: ஐஎம்டி ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு
தேசியத் தலைநகா் தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமையும் அவ்வப்போது மழை பெய்தது. நகரத்தில் பகல் முழுவதும் மேகமூட்டமான சூழ்நிலை நீடித்தது. என்சிஆா் பகுதிகளிலும் தொடா்ந்து மழை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்த சில நாள்களில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)) நகரத்திற்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகளை விடுத்து, கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என்று எச்சரித்தது. இருப்பினும், பின்னா் அது மஞ்சள் எச்சரிக்கையாகக் குறைக்கப்பட்ட்டது. இதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
புதன்கிழமை மாலை 5.30 மணி வரை, சஃப்தா்ஜங்கில் உள்ள நகரத்தின் முதன்மை வானிலை ஆய்வு மையம் 15.2 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் லோதி சாலையில் 18.2 மிமீ மழையும், பாலத்தில் 22 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக ஐஎம்டி தரவு காட்டுகிறது. ரிட்ஜில் 59.6 மிமீ மழையும், ஆயா நகரில் 54.8 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்த அசாதாரணமான கனமழை காரணமாக நகரத்தின் பருவகால மழைப்பொழிவு 1,000 மி.மீட்டரைத் தாண்டியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேசியத் தலைநகா் ஏற்கெனவே ஆண்டு சராசரி மழைப்பொழிவான 774 மி.மீட்டரை தாண்டியிருந்தது.
நகரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியஸாக ஆக பதிவாகியது. இது இயல்பை விட 1.8 டிகிரி குறைவாகும். குறைந்தபட்ச வெப்பநிலையும் சராசரியை விட 2.8 டிகிரி குறைவாக 22.8 டிகிரி செல்சியஸாக இருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை, வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று மழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வ்ு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 33 டிகிரி செல்சியஸ் மற்றும் 24 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தில்லியில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு காற்றின் தரம் ’திருப்தி’ பிரிவில் பதிவாகியுள்ளது. தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்று தரக் குறியீடு 57 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (செப்டம்பா் 4) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.