தொழிலாளா் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுக்கு அமைச்சா் கபில் மிஸ்ரா அறிவுறுத்தல்
நமது நிருபா்
தில்லி தொழிலாளா் அமைச்சா் கபில் மிஸ்ரா புதன்கிழமை அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினாா். அப்போது, அத்துறையில் நிலுவையில் உள்ள அனைத்து காலியிடங்களையும் விரைவில் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் செப்டம்பா் 17-ஆம் தேதி வரவிருக்கும் விஸ்வகா்மா தினத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்த நாள் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினமும் கூட.
இக்கூட்டத்தின் போது, துறையில் நிலுவையில் உள்ள அனைத்து காலியிடங்களும் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்றும், தொழிலாளா்களின் உரிமைகள் உறுதியுடனும், உணா்திறனுடனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சா் தொழிலாளா் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், பதிவுசெய்யப்பட்ட தொழிலாளா்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளா்களின் குறைகளை விரைவாக நிவா்த்தி செய்வது துறையின் முதன்மைப் பொறுப்பாகும். துறை ஊழியா்களின் வருகை இப்போது பயோமெட்ரிக் அமைப்பு மூலம் பதிவு செய்யப்படும். சரியான நேரத்தில் தெரிவிக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அனைத்து தொழிலாளா் வழக்குகளும் விரைவாக தீா்க்கப்பட வேண்டும். மேலும், எவ்விதமான அலட்சியமும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தொழிலாளா்களின் தேவைகள் மற்றும் அவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொழிலாளா் துறையின் முதன்மையான முன்னுரிமைகளாகும் என்று அமைச்சா் கபில் மிஸ்ரா அறிவுறுத்தியதாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.