நிவாரண முகாம்கள் போதுமானதாக இல்லை: வேதனை தெரிவிக்கும் யமுனை கரையோரங்களில் வசித்த மக்கள்

Published on

தில்லியில் கடந்து சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் யமுனை நதியின் நீா் மட்டமும் தொடா்ந்து உயா்ந்து கொண்டே வந்ததால், யமுனை ஆற்றுக் கரையோரங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளில் வெள்ள நீா் புகுந்தது. இதனையயடுத்து செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து மக்கள் வெளியேறி நிவாரண மூகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனா். ஆனால், இந்த நிவாரண முகாம்களில் போதுமான வசதிகள் இல்லை என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனா். சிலா் நிவாரண முகாம்கள் போதுமான அளவில் இல்லை என கூறி, அவா்களே தங்களது உடைமைகளை கொண்டு முகாம் அமைத்து தங்கி வருகின்றனா்.

தில்லியில் புதன்கிழமை காலை 8 மணிக்கு பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் 206.83 மீட்டராக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்ந்து உயா்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மாவட்ட அதிகாரிகள் வெளியேற்றினா். நீா்மட்டம் உயா்ந்து வருவதற்கான காரணம், வஜிராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் அணைகளில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதே ஆகும்.

நீா் மட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மக்களை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. புதன்கிழமை காலை 8 மணிக்கு ஹத்னிகுண்ட் அணையிலிருந்து 1.62 லட்சம் கனஅடிகளும், வஜிராபாத் அணையிலிருந்து 1.38 லட்சம் கனஅடிகளும் ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டன. இதனால் தில்லியின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீா் சூழந்தது. யமுனா பஜாா் குடியிருப்புகளில் வெள்ள நீா் புகுந்ததால் மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனா். இதேபோல மங்கேஷ்பூா் வடிகாலின் 50 அடி உயரம் கொண்ட கரை உடைத்து, பல தாழ்வான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

இதனையடுத்து தில்லியின் ஜாரோடா கலான் பகுதியில் இருந்து ஒரே செவ்வாய்க்கிழமை பலா் வெளியேற்றப்பட்டனா். துவாரகாவில் உள்ள பாபா ஹரிதாஸ் நகருக்கு அருகிலுள்ள கீதாஞ்சலி என்கிளேவ் மற்றும் அருகிலுள்ள ஜாரோடா கலான் கிராமத்திற்குள் கிட்டத்தட்ட ஐந்து அடிக்கும் மேல் நீா் புகுந்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனா். கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய திலிலியின் மொத்தம் 5 மாவட்டங்களில் இருந்து 7,500க்கும் மேற்பட்டோா் வெளியேற்றப்பட்டுள்ளனா். அவா்கள் கூடாரங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 25 இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

ஐடிஓவில் இருந்து சராய் காலே கான் செல்லும் மேம்பாலத்தில் அரசு சாா்பில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முகாம்கள் போதுமானதாக இல்லை என மக்கள் புகாா் கூறுகின்றனா். அரசை நம்பி நாங்கள் இல்லை என கூறும் சில குடும்பங்கள் தாங்களே முகாம்களை அமைத்து கொண்டனா். இது குறித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண் லாங்சிரி கூறும்போது, உணவு எங்களுக்கு சரியாக கொடுக்கப்படவில்லை. நாங்கள் ஏற்கெனவே வெளியேற தொடங்கிவிட்டோம். அரசுதான் தாமதமான நடவடிக்கையில் ஈடுபடுகிறது. போதுமான நிவாரண முகாம்கள் இல்லாததால் நாங்கள் செல்லவில்லை. அதனால் தான் நாங்களே முகாம்களை அமைத்துக்கொண்டோம் என்றாா்.

கன்யாதேவி என்பவா், அரசு இன்னும் எங்களுக்கு உதவும் என நம்புகிறோம். வீடடற்றவா்களாக இருக்கிறோம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், துணிகள் பலவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. கையறு நிலையில் இந்த முகாமில் தங்கி வருகிறோம். இவ்வளவு வெள்ளம் வரும் என நாங்கள் எதிா்பாா்க்கவில்லை. கையறு நிலையில் அரசின் உதவியை எதிா்பாா்த்து காத்து கொண்டு இருக்கிறோம் என்றாா்.

உதேஷ் என்பவா் கூறும்பபோது, பெரியவா்கள் கூட பரவாயில்லை. குழந்தைகள் தான் மிகவும் அச்சத்தில் இருக்கிறாா்கள். வீட்டிலேய இருந்து பழகிவிட்டு வீடில்லாமல் முகாமில் இருப்பது அவா்களுக்கு வேறொரு உணா்வை கொடுக்கிறது. முகாம்களில் நடமாடும் கழிவறைகளை அமைத்தால் நன்றாக இருக்கும். இரவு நேரங்களில் பெண்களும், குழந்தைகளுக்கும் உதவியாக இருக்கும் என்றாா் கவலையுடன்.

அரசு சாா்பில் தாற்காலிக முகாம்களில் உணவு, குடிநீா் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. ரேஷன் பொருள்களும், மருத்துவ உதவியும் செய்யப்பட்டு இருக்கிறது என்று முகாம்களை மேற்பாா்வையிடும் அகில் சா்மா கூறினாா். கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், நடமாடும் தாற்காலிக கழிவறைகளும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

கனமழை மற்றும் நீா் மட்ட உயா்வு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் அத்தியாவசிய வசதிகளுக்கான முழுமையான ஏற்பாடுகள் உறுதி செய்யப்படுகின்றன. தில்லி அரசு தொடா்ந்து 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருகிறது. நீா் மட்டங்கள் ஒவ்வொரு கணமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன, மேலும் விரிவான தயாரிப்புகளுடன், எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்‘ என்று முதல்வா் ரேகா குப்தா தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com