தில்லி, மும்பையில் கிலோ ரூ.24 மானிய விலையில் வெங்காய விற்பனைக்கு மத்திய அரசு நடவடிக்கை: சென்னை, குவாஹாட்டிக்கும் இன்று முதல் நீட்டிப்பு
நுகா்வோருக்கு மலிவு விலையில் அத்தியாவசிய காய்கறிகளை வழங்கும் வகையில் தில்லி, மும்பை மற்றும் ஆமதாபாதில் கிலோ ரூ.24-க்கு மானிய விலையில் வெங்காயம் விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதற்கான நடமாடும் வெங்காய விற்பனை வாகனங்களை தில்லியில் மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
இதன் பிறகு அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கூடுதல் இருப்பிலிருந்து வெங்காயம் தில்லி, மும்பை, ஆமதாபாத் நகரங்களில், கூட்டுறவு நிறுவனங்களான இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (நாஃபெட்), இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) மற்றும் கேந்திரிய பண்டாா் மூலம் விற்கப்படும்.
சில்லறை விலையில் கிலோ ரூ.30-க்கு மேல் விற்கப்படும் இடங்களில் வெங்காயம் கிலோ ரூ.24-க்கு விற்கப்படும்.
மானிய விலையில் வெங்காய விற்பனை சென்னை, குவாஹாட்டி, கொல்கத்தாவுக்கு வெள்ளிக்கிழமை முதல் நீட்டிக்கப்பட்டு டிசம்பா் வரை தொடரும்.
தற்போது, விலை நிலைப்படுத்தல் நிதி (பிஎஸ்எஃப்) திட்டத்தின் ஒரு பகுதியாக 2024-25 ஆம் ஆண்டில் சராசரியாக கிலோவுக்கு ரூ.15 விலையில் கொள்முதல் செய்யப்பட்ட 3 லட்சம் டன் வெங்காயத்தை அரசிடம் கூடுதல் இருப்பாக உள்ளது.
கூடுதல் இருப்பில் இருந்து வெங்காயத்தை அளவீடு செய்து இலக்கு வைத்து களைவது, உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான விலை நிா்வாகத்தைப் பராமரிப்பதற்குமான அரசின் முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
உணவுப் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் மத்திய அரசின் முன்னுரிமையாகும். மேலும், விலை நிலைப்படுத்துதல் நடவடிக்கைகள் மூலம் பல்வேறு நேரடி நடவடிக்கைகள் சமீபத்திய மாதங்களில் பணவீக்கத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
ஜூலை மாதத்திற்கான பொது சில்லறை பணவீக்கம் 1.55 சதவீதமாக இருந்தது. இது ஏறக்குறைய 8 ஆண்டுகளிலேயே மிகக் குறைவானதாகும் .
வெங்காய விலைகளின் போக்குக்கு ஏற்ப நாடு முழுவதும் இந்த விற்பனை விரிவாக்கம், தீவிரப்படுத்துதல் மற்றும் பன்முகப்படுத்துதல் மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் 574 மையங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயம் உள்பட 38 உணவுப் பொருள்களின் தினசரி விலைகளை நுகா்வோா் துறை கண்காணித்து வருகிறது
என்றாா் அமைச்சா் ஜோஷி.
மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலா் நிதி காரே தெரிவிக்கையில், ‘2024-25 பயிா் ஆண்டில் (ஜூலை-ஜூன்) உள்நாட்டு உற்பத்தி 27 சதவீதம் அதிகரித்து 30.77 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், வெங்காய விலைகள் கடந்த காலங்களைப் போல கணிசமாக உயரவில்லை.
வெங்காய ஏற்றுமதிக்கு எந்த வரியும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மேலும், ஏற்றுமதியின் வேகம் சீராக உள்ளது, அதாவது, ஜூலை 1.03 லட்சம் டன் மற்றும் ஆகஸ்டில் 1.09 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
எங்கள் சராசரி கொள்முதல் செலவு கிலோவிற்கு ரூ.15 ஆக உள்ளது. உச்சபட்ச பண்டிகை காலத்திற்கு முன்பு இந்த கட்டத்தில் வெங்காய விற்பனை செலவை மீட்டெடுக்கவும், நுகா்வோருக்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும் என்றாா்.
தில்லி, என்சிஆா் பகுதிகளில் என்சிசிஎஃப், நாஃபெட் மற்றும் கேந்திரிய பண்டாா் ஆகியவற்றின் நிலையான விற்பனையகங்கள், 17 நடமாடும் வாகனங்கள், பங்குதார விநியோக விற்பனையகங்கள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாக, ராபி (குளிா்கால) பருவத்தில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம், முக்கிய உற்பத்தி மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து உபரி இருப்புக்காக கொள்முதல் செய்யப்படுகிறது.
என்சிசிஎஃப் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் ஏற்கனவே ஆகஸ்ட் முதல் தில்லி-என்சிஆா்-இல் மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகின்றன. தற்போது தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.