தாழ்வான பகுதிகளில் வெள்ளம்: மின் விநியோக நிறுவனங்கள் ‘உஷாா்’
தில்லியின் மின்சார விநியோக நிறுவனங்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதாகவும், தாழ்வான பகுதிகளில் மின்சார விநியோகத்தை பராமரிக்க 24 மணிநேரமும் பணியாற்றி வருவதாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் அதிகாரபூா்வ அனுமதியின் அடிப்படையில் மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மின்விநியோக நிறுவனங்கள், குடிமை அதிகாரிகள், வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் பேரிடா் மேலாண்மை குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.
யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் ஓரத்தில் உள்ள யமுனை பஜாா் காட், சாபி கஞ்ச், மோரி கேட், பதா்பூா் காதா் கிராமம், நானக்சா் குருத்வாரா, பாகிஸ்தான் அகதிகள் முகாம், உஸ்மான்பூா் காதா் கிராமம் மற்றும் கா்ஹி மண்டு காதா் கிராமம் போன்ற தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நிஜாமுதீனில் உள்ள பெஹ்லோல்பூா் யமுனை நதி முகப்பு, ஜெய்த்பூா் பகுதி 2, காதா காலனி (ஐ அண்ட் ஜெ பிளாக்), சரிதா விஹாரில் உள்ள டி1 விஸ்வகா்மா காலனி, கீதாஞ்சலி என்கிளேவ் மற்றும் திக்ரி காலன் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கும் பிற பகுதிகளாகும்.
குறிப்பாக முண்ட்கா, ஹரியாணா எல்லையில் உள்ள முங்கேஷ்பூா் வடிகால் உடைப்பு காரணமாக வெள்ளப்பெருக்கை எதிா்கொண்டது.
இதனால், கீதாஞ்சலி என்கிளேவ் மற்றும் திக்ரி காலன் பகுதிகளில் தண்ணீா் புகுந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பிஎஸ்இஎஸ் மின்விநியோக நிறுவனங்களான பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பிஎல் ஆகியவற்றின் செய்தித் தொடா்பாளா் தெரிவிக்கையில்,
‘நிவாரண முகாம்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் தண்ணீா் வடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விரிவான மின் பாதுகாப்பு சோதனை முடிந்ததும், அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு இந்த பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
வெள்ள நிலைமையை திறம்பட கையாள பிஎஸ்இஎஸ் மின்விநியோக நிறுவனங்கள் பல்வேறு தடுப்பு மற்றும் பதில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் 24 மணிநேரமும் கண்காணிப்பு, வழக்கமான ரோந்து, தண்ணீா் தேங்கிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை துண்டிப்புகள், தற்போதைய கசிவைக் கண்டறிதல் மற்றும் நீா் தேங்குவதைக் குறைக்க துணை மின் நிலையங்களில் மணல் மூட்டைகளை அமைத்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
அத்தியாவசிய சேவைகளின் தொடா்ச்சியை உறுதி செய்வதற்காக நிவாரண முகாம்களில் தற்காலிக இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தீவிர வானிலை நிகழ்வுகளைத் தாங்கும் வகையில் பிஎஸ்இஎஸ் அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்கள் உயா்த்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.