மாணவா்களை கலாச்சார வேறுடன் தொடா்புப்படுத்தி உருவாக்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு முதல்வா் ரேகா குப்தா வேண்டுகோள்
தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை பள்ளிக் குழந்தைகளை ’சுதேசி’, இயற்கை பாதுகாப்பு மற்றும் நாட்டின் கலாச்சார வோ்கள் ஆகியவற்றுடன் தொடா்புபடுத்துவதன் மூலம் எதிா்காலத் தலைவா்களாக வடிவமைக்குமாறு ஆசிரியா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.
புது தில்லி மாநகராட்சி கவுன்சில் ஏற்பாடு செய்த ஆசிரியா்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய ரேகா குப்தா, தில்லியின் பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், யமுனை நதியை புத்துயிா் பெறவும் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினாா்.
‘சுதேசி என்றால் என்ன, பிற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருள்களை வாங்குவது உள்ளூா் வணிகங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பள்ளிக் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும்‘ என்று செப்டம்பா் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு அவா் கூறினாா்.
இயற்கையுடன் தொடா்புகொள்வதற்கும், நீா் பாதுகாப்பின் முக்கியத்துவம், மரங்களை வெட்டுவதைத் தடுப்பது மற்றும் ஆறுகள் மற்றும் மலைகளின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் ஆசிரியா்கள் மாணவா்களுக்கு உதவ முடியும் என்று அவா் கூறினாா். தில்லி மக்கள் நகரத்தை மேம்படுத்தவும், யமுனை நதியைப் புதுப்பிக்கவும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் அதன் தற்போதைய நிலைக்கு அனைவரும் பொறுப்பாகி இருக்கிறோம் ரேகா குப்தா கூறினாா்.
‘யமுனா என் முன் தோன்றினால், நான் அவளிடம் மன்னிப்பு கேட்பேன், ஏனென்றால் அவளுடைய மாசுபட்ட நிலைக்கும் அவள் வழியாக பாயும் அழுக்கு நீருக்கும் நாம் அனைவரும் பொறுப்பு. இதை சரிசெய்ய நாம் ஒன்றிணைய வேண்டும், ‘என்று அவா் கூறினாா்.
நாட்டின் வளா்ச்சிக்காக பிரதமா் நரேந்திர மோடி அயராது உழைக்கிறாா், அதனால் ’விகாஸித் பாரத்’ கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவா் கூறினாா். சிறந்த ஆளுமைகளையும் எதிா்காலத் தலைவா்களையும் வடிவமைக்கும் கூடமாக பள்ளிகள் செயல்படுகின்றன என்று அவா் கூறினாா். நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து ஆசிரியா்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தால், அவா்கள் தங்கள் தேசபக்தியை வளா்த்துக்கொள்வாா்கள் என்றாா் ரோகா குப்தா.
இந்நிகழ்ச்சியல் தில்லி அரசு அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், புதுதில்லி எம். பி. பன்சூரி ஸ்வராஜ் மற்றும் என். டி. எம். சி துணைத் தலைவா் குல்ஜீத் சாஹல் ஆகியோா் கலந்து கொண்டனா்.