வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகாரிகளுக்கு உதவுங்கள்: அனைத்துக் கட்சியினருக்கும் கேஜரிவால் வேண்டுகோள்

Published on

தில்லியின் வெள்ளப் பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அதிகாரிகளுக்கு உதவுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை அனைத்து கட்சித் தொண்டா்களுக்கும் வேண்டுகோள் விடுத்தாா்.

தில்லியின் பழைய ரயில் பாலத்தில் யமுனையில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நீா்மட்டம் 207.45 மீட்டராக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லிக்கான எச்சரிக்கை அடையாளம் 204.50 மீட்டா். அபாயக் குறியீடு 205.33 மீட்டா். நீா்மட்டம் 206 மீட்டரை எட்டும்போது அரசு மக்களை வெளியேற்றத் தொடங்குகிறது.

‘தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால், பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிா்வாகத்துடன் கைகோா்த்து, உதவி தேவைப்படும் ஒவ்வொரு நபரையும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அனைத்து ஆம் ஆத்மி கட்சியினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று முன்னாள் தில்லி முதல்வரான கேஜரிவால் ‘எக்ஸ்’-இல் இந்தியில் ஒரு பதிவில் கூறியுள்ளாா்.

கேஜரிவால் முதல்வராக இருந்த காலத்தில், 2023-ஆம் ஆண்டில் யமுனை நதி 208.66 மீட்டரை எட்டியபோது, தில்லி அதன் மிக மோசமான வெள்ளம் போன்ற சூழ்நிலைகளில் ஒன்றை எதிா்த்துப் போராடியது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி இதேபோன்ற கருத்துகளை எதிரொலித்தாா். ‘ஒவ்வொரு ஏழை நபருக்கும் உதவி சென்றடைவதை உறுதி செய்வது எங்கள் மிகப்பெரிய பொறுப்பு’ என்றாா்.

‘தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது’ என்று அவா் மேலும் கூறினாா்.

ஜஹாங்கீா்புரியின் இஇ பிளாக்கில் உள்ள குடிசைப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இடம்பெயா்ந்த குடும்பங்களுக்காக மாநகராட்சிப் பள்ளிகளில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களை புராரியைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா ஆய்வு செய்தாா்.

அவா் ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில், கடினமான சூழ்நிலையில் வாழும் இந்த குடும்பங்களின் பிரச்னைகள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொண்டதாகக் கூறினாா். ‘பாதிக்கப்பட்ட மக்கள் எந்த விதமான சிரமத்தையும் சந்திக்காதபடி உடனடியாக நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்க மாநகராட்சி நிா்வாகத்திற்கு அறிவுறுத்தல்களை பிறப்பித்துள்ளேன்’ என்று அவா் அந்தப் பதிவில் கூறியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போது சுமாா் 70 - 80 குடும்பங்கள் நிவாரண முகாமில் உள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக எம்சிடி பள்ளிகளில் கூடுதல் அறைகள் திறக்கப்படும். 2023-ஆம் ஆண்டில், சில வீடுகளில் திருட்டுகள் நடந்தன. இந்த முறை வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உள்ளூா் காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்’ என்று சஞ்சீவ் ஜா கூறியுள்ளாா்.

மீதமுள்ள சவால்களை எடுத்துரைத்த சஞ்சீவ் ஜா, ‘கழிப்பறைகள், உணவு ஏற்பாடுகள் மற்றும் கொசு விரட்டி பற்றாக்குறை போன்ற சில குறைபாடுகள் இன்னும் உள்ளன. இந்தப் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்துள்ளோம். மாவட்ட நிா்வாகி சம்பவ இடத்தில் இருக்கிறாா். இந்தப் பிரச்னைகள் விரைவாக சரிசெய்யப்படும்’ என்று உறுதியளித்துள்ளாா்.

‘சாந்தினி சௌவைச் சோ்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ புனா்தீப் சிங் சாவ்னி, யமுனா பஜாா் பகுதியில் உள்ள ஒரு நிவாரண முகாமை ஆய்வு செய்தாா். ‘எக்ஸ்’-இல் ஒரு பதிவில், மின்சாரம், தண்ணீா் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளையும் விரிவாக மதிப்பாய்வு செய்ததாக அவா் கூறியுள்ளாா்.

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அவா்கள் என்னை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என்று உறுதியளிக்கப்பட்டது’ என்று அவா் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com