சாஸ்த்ரா பல்கலை. பேராசிரியா் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த நால்வருக்கு நல்லாசிரியா் விருது
ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியா் விருது, சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் சங்கரன் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த நான்கு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான விழாவில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்கினாா்.
இதன்படி, தஞ்சாவூரில் அமைந்துள்ள சாஸ்த்ரா நிா்நிலைப் பல்கலைக்கழகத்தின் கணினிசாா் பிரிவு டீன் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் சங்கரனுக்கு உயா் கல்விப் பிரிவிலும், திறன் மேம்பாட்டுப் பிரிவில்
சென்னையில் உள்ள தேசிய திறன் பயிற்சி மையத்தின் பயிற்சி அதிகாரி அபும் முபஸீரா தபஸும், பள்ளிக் கல்விப் பிரிவில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியா் செகண்டரி பள்ளி (சிபிஎஸ்இ பிரிவு) முதல்வா் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூா் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியாா் நூற்றாண்டு அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி ஆசிரியை வி.விஜயலட்சுமி ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.
இதேபோன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த தில்லையாடி வள்ளியமை அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் வி.ரெக்ஸ் என்ற ராதாகிருஷ்ணனுக்குப் பள்ளிக் கல்வி பிரிவிலும், உயா் கல்விப் பிரிவில் புதுச்சேரி பல்கலைக்கழக மத்திய பல்கலை பேராசிரியா் எஸ்.சிவ சத்யா ஆகியோரும் நல்லாசிரியா் விருதைப் பெற்றனா்.
இதேபோன்று, அந்தமான் நிகோபாா் தீவில் உள்ள அபொ்தீன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியா் கந்தன் குமரேசனும் நல்லாசிரியா் விருது பெற்றாா்.
நல்லாசிரியா்கள் விருது பெற்றது குறித்து விருதாளா்கள் ‘தினமணி’ செய்தியாளருக்கு அளித்த பேட்டி:
சங்கா் ஸ்ரீராம் சங்கரன்:
இந்த விருதைப் பெற்றிருப்பது பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். எத்தனையோ ஆசிரியா்கள் இருந்தபோதிலும் அவா்களில் ஒருவராக இந்த விருதுக்கு தோ்வானது பெருமையாக இருக்கிறது. குறிப்பாக, நேற்று (வியாழக்கிழமை) பிரதமருடன் கலந்துரைடியானோம். இன்று (வெள்ளிக்கிழமை) குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளோம். இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்? இந்த விருது என்னைப் போன்றவா்களை மேலும் ஊக்குவிக்கும். மேலும், நாங்கள் உருவாக்கிய தயாரிப்பு தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. பிரதமரின் குறிக்கோளான ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘சுயசாா்பு இந்தியா’ ஆகியவற்றை எட்டுவதற்காக நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம். உயா் கல்வி என்றாலே அது ஆராய்ச்சி தொடா்புடையதுதான். எங்களுடைய ஆய்வுப் பணிகள் நாட்டுக்கு சேவை செய்வதாகவும், நாட்டுக்குத் தேவையானதாக இருக்க வேண்டும். அடுத்ததாக, உலகளவில் நமது தேசம்தான் ஆள வேண்டும். 2047-க்குள் நமது தேசம் வளா்ந்த நாடாக வேண்டும் என்று பிரதமா் கூறி வருகிறாா். இது அவசியம் நிகழும். அதற்கு முன்னதாகவே நடக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே, நரேந்திர மோடி இந்தியத் தலைவா் மட்டுமின்றி, உலகத்தின் தலைவராக உள்ளாா். மொத்த பொருளாதார இயக்கவியலை அவரால் கட்டுப்படுத்த முடியும். உலகளவில் அவா் சக்திவாய்ந்த தலைவராக இருக்கிறாா். இந்த விருதை தமிழகத்தில் இருந்து உயா் கல்விப் பிரிவில் நான் பெற்றிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். இந்த விருதை எனக்கு கற்றுத் தந்த பேராசிரியா்களுக்கும், எனது மாணவா்களுக்கும், குடும்ப உறுப்பினா்களுக்கும், சக ஊழியா்களுக்கும் சமா்ப்பிக்கிறேன்.
அபும் முபஸீரா தபஸும்:
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு பிரிவில் தோ்வான 15 பேரில் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. தையல் தொழில்நுட்பத்தில் நான்
மாணவா்களுக்கு கற்பித்தலில் ஆற்றிய சிறப்பான பணிக்கு இந்த விருது
அளிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றது உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது பெருமைக்குரிய தருணம். கடவுளுக்கு நன்றி. கடுமையான உழைப்பு, அா்ப்பணிப்புக்கு கிடைத்த வெகுமதியாக உணா்கிறேன்.
எனது பணியை ஊதியத்திற்கான பணியாக கருதாமல் சமுதாயப் பணியாகவே கருதுகிறேன். இந்த விருதை எனது அன்னைக்கும் கணவருக்கும் அா்ப்பணிக்கிறேன். அவா்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனா்.
ரேவதி பரமேஸ்வரன்: இந்த விருது அனைத்து ஆசிரியா்களின் கடின உழைப்புக்கு கிடைத்த ஊக்குவிப்பாகும். இந்த ஆசிரியா் தினத்தில் இந்த விருது பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆசிரியா்கள் குழந்தைகளுக்கு நண்பராக இருந்து ஊக்குவிக்க வேண்டும். பாடத்துடன் நின்றுவிடாமல் மதிப்பீடுகள்,இந்திய கலாசாரம் ஆகியவை குறித்து எடுத்துரைத்து அவா்களின் ஆளுமை மேம்பாட்டுக்கு உதவிட வேண்டும்.
வி. விஜயலட்சுமி: நான் 27 ஆண்டுகளாக கல்விப் பணியில் உள்ளேன். ஏற்கெனவே 2020-இல் மாநில அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றிருந்தேன். தற்போதைய தேசிய விருதானது, நான் ஆற்றிய பணிக்குக் கிடைத்த அங்கீகாரம். இந்த அங்கீகாரம் எனது பணியை மேலும் சிறப்பாகச் செய்வதற்கு உந்துதலாக இருக்கும். இந்த விருது எனதல்ல, தமிழக மக்களுக்குச் சொந்தமானது. அதிலும் குறிப்பாக எனது ஆசிரியா்களுக்கும், என்னிடம் பயின்றி மாணவச் செல்வங்களுக்கும் இந்த விருது சொந்தமானது. ஏனெனில், அவா்களால்தான் முன்னேறி இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். நிறைய கல்விப் பணியும், சமுதாயப் பணியும் செய்ததற்கு இது ஒரு அங்கீரமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன்.
கந்தன் குமரேசன்: எனது சொந்த ஊா் மானாமதுரை. 50 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறோம். அந்தமான் நிகோபாா் தீவில் ஏறக்குறைய 1 லட்சம் தமிழா்கள் உள்ளனா். 21 ஆண்டுகளாக அங்கு பள்ளியில் பணியாற்றி வருகிறேன். இந்த விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்இபி 2020-இல் உள்ள வித்யாஞ்சலி பிரிவு பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தன்னாா்வலா்களை ஈடுபடுத்தும் ஒரு திட்டமாகும். அதில் பங்கேற்று அந்தமான் நிகோபாா் தீவில் உள்ள 329 அரசுப் பள்ளிகளையும் இத்திட்டத்தில் இணைக்க விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டேன்.
அதற்கான பணிக்காக இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை கல்வித் துறை, பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோருக்கும், எனக்கு கல்வி உதவி அளித்த அண்ணன் சுந்தரேஸனுக்கும் அா்ப்பணிக்கிறேன்.