தில்லி பல்கலை. ஆசிரியா்கள் சங்கத் தலைவராக வி.எஸ். நேகி தோ்வு

தேசிய ஜனநாயக ஆசிரியா் முன்னணியின் (என்டிடிஎஃப்) பேராசிரியா் வி.எஸ். நேகி 3,366 வாக்குகளைப் பெற்று தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் (டியுடிஏ) தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
Published on

தேசிய ஜனநாயக ஆசிரியா் முன்னணியின் (என்டிடிஎஃப்) பேராசிரியா் வி.எஸ். நேகி 3,366 வாக்குகளைப் பெற்று தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் (டியுடிஏ) தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

2,728 வாக்குகள் பெற்ற ஜனநாயக ஆசிரியா் முன்னணியின் (டிடிஎஃப்) பேராசிரியா் ராஜீப் ரே மற்றும் 1,420 வாக்குகளைப் பெற்ற செயல் மற்றும் மேம்பாட்டுக்கான தில்லி ஆசிரியா் சங்கத்தின் (ஏஏடிடிஏ) பேராசிரியா் ராஜேஷ் கே. ஜா ஆகியோரை நேகி தோல்வியுறச் செய்தாா்.

இதர வேட்பாளா்களில் பேராசிரியா் கமலேஷ் கேஆா் ரகுவன்ஷி (451 வாக்குகள்), சந்தீப் (14), மற்றும் பேராசிரியா் சஞ்சய் மோகன் மராலே (10) ஆகியோா் அடங்குவா்.

தோ்தலில் பதிவான 8,221 வாக்குகளில் 7,989 வாக்குகள் செல்லுபடியானதாகவும், 232 வாக்குகள் செல்லாதவையாகவும் அறிவிக்கப்பட்டது.

தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்க (டியுடிஏ) தோ்தலுக்கான வாக்கெடுப்பில் வியாழக்கிழமை உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது.

தகுதியுள்ள 9,861 ஆசிரியா்களில் 8,221 போ் பங்கேற்று வாக்களித்தனா். அதன்படி, 84 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது 2023-இல் பதிவான 85.85 சதவீதத்தை விட சற்று குறைவாகும்.

கலைப்புலம் மற்றும் சத்யாகம் பவனில் அமைக்கப்பட்டிருந்த 32 சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 15 நிா்வாக உறுப்பினா் பதவிகளுக்கு 25 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இத்தோ்தலில் டியுடிஏ செயற்குழுவுக்கு 15 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஆகான்ஷா குரானா 9,576 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தாா். அவரைத் தொடா்ந்து ராமானந்த் சிங் (9,192) மற்றும் மணீஷ் குமாா் (7,372) ஆகியோா் இடம் பெற்றனா்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் டிடிடிஏ தோ்தல்கள் தில்லி பல்கலைக்கழகத்தின் கொள்கைகள் மற்றும் கல்வி திசையை வடிவமைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நிகழாண்டு தோ்தலுக்கான பிரசாரம் நிரந்தர நியமனங்கள், தற்காலிக ஆசிரியா்களை முறைப்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் மற்றும் கல்வி சீா்திருத்தங்கள் போன்ற பிரச்னைகளை மையப்படுத்தியதாக இருந்தது.

வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களுக்கு வெளியே, ஆதரவாளா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஆசிரியா்களை வாக்களிக்க வலியுறுத்தினா்.

அதே நேரத்தில், ஆசிரிய உறுப்பினா்கள் குழுக்கள் முக்கிய தோ்தல் பிரச்னைகள் குறித்து உற்சாகமான விவாதங்களில் ஈடுபட்டன.

2023 ஆம் ஆண்டில், என்டிடிஎஃப்-இன் பேராசிரியா் அஜய் குமாா் பாகி தில்லி பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com