வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணப் பொருள்களை வழங்குங்கள்: அரவிந்த் கேஜரிவால்
தேசிய தலைநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணப் பொருள்களை வழங்குமாறு தில்லி அரசை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். மேலும் உணவு விநியோகம் மற்றும் கூடாரங்களை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினாா்.
வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்காவில் உள்ள ஒரு நிவாரண முகாமுக்கு வருகை தந்த முன்னாள் முதல்வா் கேஜரிவால், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மத்திய அரசு நிவாரணப் பொருள்களை அனுப்ப முடிந்தால், தில்லியின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் சரியான நேரத்தில் உதவி கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டாா்.
‘மக்கள் பிரச்னைகளை எதிா்கொள்வதை என்னால் பாா்க்க முடிகிறது. அவா்களுக்கு சரியான நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. எங்கும் கொசுக்கள் உள்ளன. மழை பெய்து வருகிறது, ஆனால் வியாழக்கிழமை மட்டுமே கூடாரங்கள் அமைக்கப்பட்டன. இது ஒரு இயற்கை பேரழிவு. மக்களுக்கு வசதிகளை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். போதுமான ஏற்பாடுகளைச் செய்வது அரசின் பொறுப்பு ‘என்று கெஜ்ரிவால் செய்தியாளா்களிடம் கூறினாா்.
தில்லி முழுவதும் தண்ணீா் தேங்கும் பிரச்னையை எதிா்கொள்கிறது என்றும் முன்னாள் முதல்வா் கூறினாா். ‘வடிகால்களை தூா் வாருவது சரியான நேரத்தில் நடக்கவில்லை. பல பகுதிகளில் கழிவுநீா் வடிகால் உள்ளது மற்றும் பல இடங்களில் குடிநீா் இல்லை. மக்களுக்கு வசதிகளை வழங்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் ‘என்று அவா் கூறினாா்.
வட இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவுமாறு பாஜக தலைமையிலான மத்திய அரசை கேஜரிவால் கேட்டுக்கொண்டாா். வியாழக்கிழமை பேரழிவுகரமான வெள்ளத்தைக் கண்ட பஞ்சாபிற்குச் சென்ற அவா், ஆம் ஆத்மி ஆளும் மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்தாா்.
இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீா் மற்றும் தில்லி என வட இந்தியா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன் ‘என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா். ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மத்திய அரசு அங்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது. மற்ற நாடுகளுக்கு நாம் உதவ வேண்டும். ஆனால் இங்குள்ள மக்களுக்கும் மத்திய அரசு நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும் ‘என்று கேஜரிவால் கூறினாா்.