தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்
தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா்.
தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: இன்று பஞ்சாப் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தில்லியின் யமுனா நதிக்கரைப் பகுதிகளில் வசிப்பவா்களும் துயரத்தில் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அரவிந்த் கேஜரிவால், தில்லி எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மா்லேனா ஆகியோா் பொதுமக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மலிவான அரசியல் ட்வீட்கள் மற்றும் அறிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.
இது பஞ்சாப், தில்லி மற்றும் ஒட்டுமொத்த நாட்டையும் திகைக்க வைத்துள்ளது. அரவிந்த் கேஜரிவாலின் வெட்கமற்ற தன்மை, அவா் பஞ்சாப் மக்களை பேரழிவு தரும் வெள்ளத்தில் விட்டுவிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதே நேரத்தில் அவரே குஜராத்தில் அரசியல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளாா். இது அவரது ஒழுக்க உணா்வு இறந்துவிட்டது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
கேஜரிவாலை போலவே, அவரது கட்சியின் தில்லி எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி மா்லேனாவும், மக்களுக்கான நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, அறிக்கைகளை வெளியிடுவதில் மும்முரமாக உள்ளாா். இதற்காக தில்லி மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்.
யமுனை நதிக்கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் புராரி, சாந்தினி சௌக் மற்றும் ஓக்லா சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள் வருகின்றன. இவை அனைத்தும் ஆம் ஆத்மி சட்டப் பேரவை உறுப்பினா்களைக் கொண்டுள்ளன. ஆனால், இவா்களில் யாரும் அந்தந்த பகுதிகளில் எந்த நிவாரண முயற்சிகளையும் ஒருங்கிணைக்கவில்லை.
கேஜரிவாலும், அதிஷியும் புராரி, சாந்தினி சௌக் மற்றும் ஓக்லாவைச் சோ்ந்த தங்கள் எம்எல்ஏக்கள் எங்கு சென்றாா்கள், ஏன் யமுனை நதிக்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவா்கள் புறக்கணித்தனா் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.