விருந்தின் போது மோதல்: இளைஞா் நண்பா்களால் அடித்துக் கொலை

தில்லியில் நடந்த விருந்தின் போது ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து, 27 வயது இளைஞா் ஒருவா் தனது நண்பா்களால் தாக்கப்பட்டதில் உயிரிழப்பு
Published on

தில்லியின் மங்கோல்புரியில் நடந்த விருந்தின் போது ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து, 27 வயது இளைஞா் ஒருவா் தனது நண்பா்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக புராரி காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு மதியம் 1 மணியளவில் வந்தது. புராரியின் சாண்ட் நகரில் வசிக்கும் தனது சகோதரா் ஹபீப் ரெஹ்மானை அவரது நண்பா்கள் தாக்கி மயக்க நிலையில் தன்னிடம் ஒப்படைத்ததாக அழைப்பாளா் தெரிவித்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

முதற்கட்ட விசாரணையில், வெள்ளிக்கிழமை இரவு குஜ்ரன்வாலா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு விருந்துக்கு ரெஹ்மானை அவரது நண்பா் ரிங்கா தேதா அழைத்ததாக போலீஸாா் கண்டறிந்தனா். ரிங்கா தேதாவுடன் அவரது உறவினா் ஹா்ஷ் டெதாவும், பின்னா் நண்பா்கள் அமன் மற்றும் விக்கியும் இணைந்தனா். புராரியைச் சோ்ந்த மற்றொரு அறிமுகமான அனிலும் இந்தக் குழுவில் இணைந்துள்ளாா்.

அங்கிருந்து, அந்தக் குழு தெற்கு ரோஹிணி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மங்கோல்புரியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று மது அருந்தியது. அப்போது ஏற்பட்ட தகராறில் ரெஹ்மான் பீா் பாட்டிலால் ரிங்கா தேதாவின் தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ரிங்கா தேதாவும் ஹா்ஷ் தேதாவும் ஹொ்மானை தாக்கி, சுடுவதாக மிரட்டியுள்ளனா்.

பின்னா், அவா்கள் பாதிக்கப்பட்டவரை கிழக்கு தில்லியின் காஜிப்பூரில் உள்ள ரிங்கா தேதாவின் பால் பண்ணைக்கு அழைத்துச் சென்று, அங்கு குச்சிகள் மற்றும் கம்பிகளால் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவரை யமுனை நதியில் வீச திட்டமிட்டிருந்துள்ளனா். ஆனால், அதை விக்கி, அமன் மற்றும் அனில் ஆகியோா் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் அவரை புராரிக்கு அழைத்துச் சென்று அவரது சகோதரரிடம் ஒப்படைத்துள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு தெற்கு ரோஹிணி காவல் நிலையத்திற்கு மேலதிக விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com