போலி ஆடம்பர பொருள்களை விற்பனை செய்ததாக ஒருவா் கைது
போலி ஆடம்பரப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டதாக ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை கூறியதாவது: மோஹித் சச்தேவா (35) என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவா், ஷாலிமாா் பாக் நகரில் உள்ள அவரது கடையில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.
கடையில் இருந்து 13 டி-சா்ட்கள், 12 ஜோடி சன்கிளாஸ்கள், 14 சட்டைகள், மூன்று ஜோடி ஜீன்ஸ், இரண்டு மணிக்கட்டு கடிகாரங்கள், ஐந்து ஜோடி காலணிகள், நான்கு ஜோடி சாக்ஸ், மூன்று தொப்பிகள், மூன்று ஜோடி பேன்ட்கள் மற்றும் ஒரு பெல்ட் உள்ளிட்ட ஏராளமான போலி பிராண்டட் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல வெற்றுப் பெட்டிகள் மற்றும் போலி பிராண்ட் டேக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஷாலிமாா் பாக் நகரில் வசிக்கும் மோஹித் சச்தேவா, தன்னை பிராண்டுகளின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக சித்தரித்து, சா்வதேச ஆடம்பர பிராண்டுகளின் லோகோக்களை ஒட்டி, சந்தையில் போலியான ஆடைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்களை அசல் தயாரிப்புகளாக விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. அவா் மீது பதிப்புரிமைச் சட்டம் மற்றும் வா்த்தக முத்திரைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலி லேபிள்கள் கொண்ட பொருள்கள் உள்ளூா் சந்தையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டிய தில்லியைச் சோ்ந்த நிருபேந்திர காஷ்யப் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, மோஹித் சச்தேவா போலி ஆடைகள் மற்றும் ஆபரணங்களை தயாரிப்பதற்காக ஒரு சட்டவிரோத பிரிவை அமைத்ததாகத் தெரிவித்தாா். இந்தப் பொருள்கள் விற்கப்படுவதற்கு முன்பு போலி லேபிள்களால் முத்திரை குத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
மொஹித் சச்தேவா லாபத்திற்காக இந்த நடவடிக்கையை நடத்தி வருவதாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாத வாடிக்கையாளா்களை அசல் பிராண்டட் பொருள்களை வாங்குவதாக நம்ப வைப்பதாகவும் அதிகாரி மேலும் குறிப்பிட்டாா்.
போலி லேபிள்கள், மூலப்பொருள்களின் ஆதாரம் மற்றும் மோசடியில் ஈடுபட்ட நபா்கள் உள்பட விநியோகச் சங்கிலியைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.