5 மாநில வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தோ்தலை சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: தோ்தலை சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இது தொடா்பாக வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் வழக்கமான இடைவெளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நடப்பாண்டு இறுதியில் தோ்தல் நடைபெற உள்ள பிகாரில் முதலாவதாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2026- இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் தோ்தலுக்கு முன்னா், நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுடன் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடைபெறும் ஆபத்து உள்ளது.

ஊடுருவல்காரா்களை வாக்காளா்களாக தொடா்ந்து சோ்ப்பது, சுதந்திரமான, நியாயமான தோ்தல்கள் நடப்பதை மோசமாக பாதிக்கும். எனவே, இந்த ஐந்து மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துவதற்கான கால அட்டவணையை அறிவிக்க இந்திய தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு மீது பதிலளிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com