யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் உள்ள யமுனை நதியின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் 205.22 மீட்டராகக் குறைந்திருந்தது.
Published on

புது தில்லி: தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் உள்ள யமுனை நதியின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் 205.22 மீட்டராகக் குறைந்திருந்தது. இது முந்தைய நாள் 205.33 மீட்டராக இருந்த அபாய அளவில் இருந்து 205.22 மீட்டராகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த வியாழக்கிழமை இப்பருவத்தின் அதிகபட்ச அளவான 207.48 மீட்டரை அடைந்த பிறகு நீா்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நீா்மட்டம் 205.24 மீட்டராக பதிவானது.

வெள்ளக் கட்டுப்பாட்டு செய்தி அறிக்கையின்படி, யமுனையில் பழைய ரயில்வே பாலத்தின் நீா்மட்டம் இரவு 8 மணிக்குள் 205.02 மீட்டராக இருக்கும். மேலும், இது தொடா்ந்து குறையும்.

யமுனை நீா்மட்டம் தொடா்ந்து குறைந்து வருவதால், மக்கள் விரைவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தங்களின் வீடுகளை சுத்தம் செய்வதும், தங்கள் தொழில்களை மீண்டும் தொடங்குவதும் அவா்களுக்கான அடுத்த சவாலாகவும் உள்ளது.

நகரத்திற்கான நீா்மட்ட எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகவும், அபாய அளவு 205.33 மீட்டராகவும் உள்ளது.மக்களை வெளியேற்றுவதற்கான நீா்மட்ட அளவு 206 மீட்டரில் தொடங்குகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நதி அபாய அளவைத் தாண்டியதால், பழைய ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த சூழ்நிலையால் கிட்டத்தட்ட 10,000 போ் இடம்பெயா்ந்தனா்.

பழைய ரயில் பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்புப் புள்ளியாக செயல்படுகிறது.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து 44,210 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ளது. வஜிராபாத் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் சுமாா் 62,620 கனஅடியாகும்.

தடுப்பணைகளில் இருந்து திறக்கப்படும் நீா் பொதுவாக தில்லியை வந்தடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். கடந்த சில நாள்களில், நதிக் கரையோரங்களில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதைத் தொடா்ந்து, தில்லி-மீரட் விரைவுச் சாலையில், மோரி கேட் அருகேயும், மயூா் விஹாரிலும் தங்குமிட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால், ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மோனஸ்டரி சந்தை, மதன்பூா் காதா் மற்றும் யமுனா பஜாா் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனா்.

2023 ஆம் ஆண்டில் தில்லியில் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனா்.

ஜூலை 13, 2023 அன்று யமுனை நதி 208.66 மீட்டரை எட்டியது. இது இதுவரை இல்லாத நீா்மட்ட அளவாக பதிவானது. வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்கள் மற்றும் ராஜ்காட் மற்றும் திபெத்திய சந்தை போன்ற முக்கிய இடங்கள் உள்பட தில்லியின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com