அடையாளம் தெரியாத இருவா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞா் காயம்

தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா் துப்பாக்கியால் சுட்டததில் 24 வயது நபா் காயமடைந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா் துப்பாக்கியால் சுட்டததில் 24 வயது நபா் காயமடைந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல்துறை அதிகாரி கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை மாலை அப்துல் வாஹித் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா் காந்தி நகரில் தனது கடையை மூடிவிட்டு தனது உறவினா்களுடன் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.

ஜக்ஜித் நகரில் வசிக்கும் வாஹித், தனது உறவினா்களான கலாம் (24) மற்றும் ஜாஹித் (13) ஆகியோருடன் ஸ்கூட்டரில் சென்றபோது, ​​2-ஆவது புஷ்டா அருகே இரண்டு போ் அவா்களை அணுகினா்.

தாக்குதல் நடத்தியவா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு துப்பாக்கியால் அவரை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, வாஹித்தின் குடும்ப உறுப்பினா்கள் அவரை ஜேபிசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் மற்றும் தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பொருள் ஆதாரங்களைச் சேகரித்தன.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவா்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான நோக்கத்தைக் கண்டறியவும் பல குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com