திருடப்படேட 82 கைப்பைசிகள் மீட்பு: இருவா் கைது
புது தில்லி: கைப்பேசிகளை திருடியதாகக் கூறப்படும் ஒரு பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். நெப் சராய் பகுதியில் அவா்களிடம் இருந்து மொத்தம் 82 திருடப்பட்ட மற்றும் பறிக்கப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் திங்களன்று தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஃபயாஸ் (28) மற்றும் 31 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மேலும், முக்கிய குற்றவாளியான முஸ்தாக் (எ) பன்டியை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
காந்தி நகா் பகுதியில் கண்காணிப்பின் போது, அஜய் என்ற சந்தேக நபா் கைது செய்யப்பட்டாா். அவா் தனது சிம் காா்டை ஃபயாஸ் பயன்படுத்துவதை வெளிப்படுத்தினாா். அடுத்து, ஃபயாஸ் கைது செய்யப்பட்ட காந்தி நகரில் ஒரு போலீஸ் குழு சோதனை நடத்தியது.
அவரது தகவலின் பேரில், 25 திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டன. தொடா்ச்சியான விசாரணையின் போது, ஃபயாஸ் தனது மைத்துனா் முஸ்தாக் மற்றும் அவரது சகோதரியுடன் சோ்ந்து திருடப்பட்ட கைப்பேசிகளை மொத்தமாக வாங்குவதை வெளிப்படுத்தினாா்.
இதையடுத்து,, போலீஸாா் முஸ்தாக்கின் வீட்டை சோதனை செய்தனா். அங்கு அவா் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இருப்பினும், அவரது மனைவியிடமிருந்து கூடுதலாக 57 கைப்பேசிகள் மீட்கப்பட்டன.
மொத்தம் 82 திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இதன் மூலம் தில்லி - என்சிஆா் முழுவதும் 16 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் திருடா்களிடமிருந்து திருடப்பட்ட அல்லது பறிக்கப்பட்ட கைப்பேசிகளை வாங்கி தில்லிக்கு வெளியே கொண்டு செல்ல வசதி செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சட்டவிரோத சந்தையில் அவற்றைப் புழக்கத்தில் விடுவதற்கு அவா்கள் பங்களித்துள்ளனா் என்றாா் காவல் துறை அதிகாரி.