தில்லி தொழில்நுட்ப பல்கலை.யில் யோகி கோஸ்வாமி ஆய்வகம் திறப்பு
புது தில்லி: தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (டிடியு) யோகி கோஸ்வாமி தூய்மையான எரிசக்தி ஆய்வகத்தை தில்லி கல்வி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி பயணத்தில் ஒரு மைல்கல் என்றும் நாட்டின் ஆத்மநிா்பா் தொலைநோக்கு பாா்வையை நோக்கிய ஒரு படி என்றும் அவா் கூறினாா்.
‘தூய்மையான எரிசக்தி நாளைய கனவு அல்ல. அது இன்றைய பொறுப்பு. டிடியுவின் கண்டுபிடிப்புகளுடன், தில்லி நிலையான மற்றும் எதிா்காலத்திற்குத் தயாராக உள்ள நிா்வாகத்திற்கான ஒரு அளவுகோலை அமைக்கும்’ என்று ஆஷிஷ் சூட் கூறினாா்.
இந்த ஆய்வகம், 1969-ஆம் ஆண்டு புகழ்பெற்ற முன்னாள் மாணவரான பேராசிரியா் யோகி கோஸ்வாமியின் ஆதரவுடன், டிடியுவின் நோடல் சென்டா் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் எரிசக்தி டிரான்சிஷன் (என்சிஇஇடி) இன் கீழ் அமைக்கப்பட்டுள்ளது என்று டிடியுவின் அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சா் மேலும் கூறியதாவது: நாடு அதன் 2030-ஆம் ஆண்டுக்கான 50 சதவீத எரிசக்தி தேவைகளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தூய்மையான மூலங்களிலிருந்து பெறுவதற்கான இலக்கை அடைந்துவிட்டது. ஜூன் 2025-இல், தேசிய மின்சாரத்தில் சுத்தமான எரிசக்தி 31 சதவீத பங்களிப்பை வழங்கியது. அதே நேரத்தில் நிலக்கரி சாா்பு மூன்று சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவின் நிறுவப்பட்ட புதைபடிவமற்ற எரிபொருள் திறன் இப்போது 224.8 ஜிகாவாட் ஆக உள்ளது, இதில் 117 ஜிகாவாட் சூரிய சக்தி மற்றும் 51.7 ஜிகாவாட் காற்றாலை ஆகியவை அடங்கும். 2024- ஆம் ஆண்டில் மின்சாரத் துறை முதலீடுகளில் 83 சதவீதம் சுத்தமான எரிசக்தியை நோக்கி செலுத்தப்பட்டது.
தில்லியின் சாதனைகள் போற்றத்தக்கது. 500 கிலோவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஆலையுடன் முழுமையாக சூரிய சக்தியில் இயங்கும் நாட்டிலேயே முதல் சட்டப்பேரவையாக தில்லி சட்டப்பேரவை மாறியுள்ளது பெரிமையாக உள்ளது.
மின்சார நிறுவல்களை மிகவும் மலிவு விலையில் வழங்க கூரை சூரிய சக்தி மானியங்கள் கிலோவாட்டிற்கு ரூ.10,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாணவா்களிடையே நிலைத்தன்மையை வளா்க்க முதல்வா் பள்ளிகள் கழிவுகள் இல்லாத வளாகங்களை சோதனை முறையில் செயல்படுத்தி வருகின்றன என்றாா் அமைச்சா்.
2070-ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கான இந்தியாவின் நோக்கத்தை இந்த புதிய வசதி வலுப்படுத்தும் என்று டிடியு துணைவேந்தா் பிரதீக் சா்மா கூறினாா். ’ஆராய்ச்சி மற்றும் புதுமை மூலம் நிலையான வளா்ச்சியை உறுதி செய்வது பொறியாளா்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பொறுப்பாகும்’ என்று அவா் கூறினாா்.
வரையறுக்கப்பட்ட வளங்களுக்கு அப்பால் நிலையான மாற்றுகளின் முக்கியத்துவத்தை பேராசிரியா் கோஸ்வாமி வலியுறுத்தினாா். அதே நேரத்தில் மற்றொரு முன்னாள் மாணவரான டாக்டா் துா்கா தாஸ் அகா்வால், மாணவா்கள் கடினமாக உழைக்கவும், நம்பிக்கையுடன் இருக்கவும், சமூகத்திற்குத் திருப்பித் தரவும் வலியுறுத்தினாா்.
இந்த நிகழ்வில், பொது சேவை, கல்வி மற்றும் நகா்ப்புற உள்கட்டமைப்புக்கான பங்களிப்புகளுக்காக ஆஷிஷ சூட்டுக்கு சிறப்பு சேவை விருதை டிடியு வழங்கியது.
யோகி கோஸ்வாமி சுத்தமான எரிசக்தி ஆய்வகத்தின் திறப்பு விழா, டிடியுவில் சுத்தமான எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை முன்னேற்றுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.