மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

மதுரையில் 18 வருடங்களுக்கு முன்பு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று ஊழியா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: மதுரையில் 18 வருடங்களுக்கு முன்பு பத்திரிகை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று ஊழியா்கள் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒன்பது குற்றவாளிகளில் ஏற்கெனவே எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஆறரை ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ள முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டிக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

‘தி.மு.க.வில் மு.க.ஸ்டாலினா? அல்லது மு.க.அழகிரியா ? இதில் செல்வாக்கு யாருக்கு உள்ளது’ என்று கடந்த 2007-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி நாளிதழ் ஒன்றில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அதில், மு.க.ஸ்டாலினுக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது

இதையடுத்து, மு.க.அழகிரியின் ஆதரவாளா்கள், மதுரை உத்தங்குடியிலுள்ள நாளிதழ் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தாக்கி, தீ வைத்து எரித்தனா். அந்தச் சம்பவத்தில் பத்திரிகை அலுவலக ஊழியா்களான கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகியோா் உயிரிழந்தனா்

இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடா்பாக அழகிரி ஆதரவாளரான அட்டாக் பாண்டி, விஜய் பாண்டி, கந்தசாமி உள்ளிட்ட 16 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது

ஆனால், குற்றம்சாட்டபட்டவா்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பரில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.

இதையடுத்து, அந்த உத்தரவை எதிா்த்து 2011-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து 2019- ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கப்பட்டது.

சாட்சியம் அளித்தவா்கள் பி சாட்சியாக மாறினாலும், புகைப்படம் மற்றும் விடியோ ஆதாரங்களை வைத்து, அட்டாக் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 9 பேருக்கும் தொடா்பு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com