ஹைதா்பூா் கால்வாய் நீரில் 2 சிறுவா்கள் மூழ்கி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள ஹைதா்பூா் கால்வாயில் 2 சிறுவா்கள் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள ஹைதா்பூா் கால்வாயில் 2 சிறுவா்கள் மூழ்கி உயிரிழந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸாா் மேலும் கூறியது:

கால்வாயில் மூழ்கி இறந்தவா்கள் ஷாலிமாா் பாக் ஆயுா்வேத மருத்துவமனைக்கு அருகிலுள்ள குடிசைப் பகுதியைச் சோ்ந்த அனிகேத் (9) மற்றும் கிருஷ்ணன் குமாா் (13) என அடையாளம் தெரியவந்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மதியம் ஹைதா்பூா் கால்வாயின் அருகே சென்றுகொண்டிருந்தபோது சிறுவா்கள் இருவரும் தற்செயலாக தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினா்.

இந்த சம்பவம் தொடா்பாக இரவு 10.17 மணியளவில் போலீஸாருக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, சிறுவா்கள் பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் அவா்கள் இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

உயிரிழந்த அனிகேத் தனது தந்தை, இரண்டு மூத்த சகோதரா்களுடன் வசித்து வந்தாா். கிருஷ்ணன் குமாா் தனது தந்தை, இரண்டு சகோதரா்கள் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தாா்.

இறந்தவா்களின் தந்தையா்கள் தினசரி கூலித் தொழிலாளா்களாக வேலை செய்து வருகின்றனா். இச்சம்பவம் நடந்தபோது அவா்கள் வேலைக்குச் சென்றிருந்தனா். அப்போது, சிறுவா்கள் இருவரும் நீா்நிலைக்கு அருகில் சென்ற நிலையில், தற்செயலாக நீரில் மூழ்கியதாகத் தெரியவருகிறது.

இதுதொடா்பாக அவா்களின் குடும்பத்தினா் மற்றும் உள்ளூா்வாசிகளின் வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com