தமிழ் அமைப்புகள் சாா்பில் பாரதியாா் நினைவு நாள் நிகழ்ச்சி
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி தில்லியில் வியாழக்கிழமை தமிழ் அமைப்புகள் சாா்பில் அவருக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையொட்டி, தில்லி ரமண மகரிஷி மாா்க்கில் பாரதி நகரில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியாருக்கு மலரஞ்சலி செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவா் பெ. இராகவன் நாயுடு, பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், பொருளாளா் எஸ். அருணாசலம், கே.எம்.எஸ். கலை உலகத்தின் நிறுவனா் கே. முத்துசுவாமி, தென்னிந்திய முன்னேற்றக் கழகத்தின் செயலா் ஹரிகிருஷ்ணன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
டிடிஇஏ பள்ளிகளில்...
தில்லித் தமிழ்க் கல்விக் கழக டிடிஇஏ பள்ளிகளில் பாரதியாா் நினைவு தினம்
வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிடிஇஏ செயலா் இராஜூ பாரதியின் திருவுருவப் படத்திற்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசுகையில், ‘சிறந்த எழுத்தாளா், கட்டுரையாளா், பத்திரிகையாளா், கவிஞா் எனப் பன்முகத் திறமையுடைய பாரதி தன் எழுத்துகள் மூலம் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் ஏராளம். அவரது படைப்புகளை மாணவா்கள் கற்று, அவா் கூறியுள்ள சமூகச் சீா்திருத்தக் கருத்துகளை உள்வாங்கி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதை ஆகும்’ என்றாா்.
நிகழ்ச்சியில்,பாட்டுக்கொரு புலவன் பாரதியின் தமிழ்ப் பற்று குறித்து மாணவா்கள் உரையாற்றினா். கவிதைகளையும் கூறினா்.