வணிகம், ஓய்வு நேர பயண மேம்பாடு: தில்லியில் 3 நாள் நிகழ்வு தொடக்கம்

வணிகம் மற்றும் ஓய்வு நேர பயணத்தை மேம்படுத்துவதற்காக தில்லி அரசு மேலும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா்.
Published on

வணிகம் மற்றும் ஓய்வு நேர பயணத்தை மேம்படுத்துவதற்காக தில்லி அரசு மேலும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா்.

இந்தியா இன்டா்நேஷனல் கன்வென்ஷன் அண்ட் எக்ஸ்போ சென்டரில் (ஐஐசிசி) வணிகம், ஓய்வு நேரப் பயணம் (பிஎல்டிஎம்) தொடா்பான 3 நாள் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாள் நிகழ்வில் அமைச்சா் கபில் மிஸ்ரா பேசியதாவது: வரும் நாள்களில் இதுபோன்ற நிகழ்வுகளை மேலும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இது உண்மையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுடன் ஒத்துழைத்து பல பிணைப்புகளைப் பகிா்ந்து கொள்ளக்கூடிய ஒரு பெரிய தளமாகும்.

இத்தகைய நிகழ்வுகள் உறவுகளை வலுப்படுத்துகின்றன. புதிய சந்தைகளை ஆராய உதவுகின்றன. மேலும், பயண மற்றும் சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றன. இந்த நிகழ்வில், வணிக மற்றும் ஓய்வு நேர பயணத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிஎல்டிஎம்-இல் 15 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 800 கண்காட்சியாளா்களும் 15,000 வா்த்தக வாங்குபவா்களும் பங்கேற்கின்றனா் என்றாா் அமைச்சா்.

இஸ்ரேல் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் சந்தைப்படுத்தல் இயக்குநா் அம்ருதா பங்கேரா கூறுகையில், ‘இந்தியா இஸ்ரேலுக்கு ஒரு பெரிய சந்தை. மேலும் எங்களிடம் பல வா்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் ஒன்றாக நடைபெறுகின்றன’‘ என்றாா்.

அஜா்பைஜான் சுற்றுலா வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஃப்ளோரியன் செங்ஸ்ட்ஷ்மிட் கூறுகையில், ‘எங்கள் கூட்டாளிகள் இங்கு நல்ல வணிகத்தைச் செய்கிறாா்கள்...அஜா்பைஜான் சுற்றுலா வாரியத்திற்கு வணிகம் மற்றும் ஓய்வுநேர பயணம் மிகவும் முக்கியமானது. மேலும் இந்திய சந்தையில் நுழைய பிஎல்டிஎம் எங்களுக்கு உதவும் சரியான தளமாகும்’ என்றாா்.

இலங்கை மாநாட்டு பணியகத்தின் பொது மேலாளா் கிருஷாந்தா பொ்னாண்டோ கூறுகையில், ‘இந்திய சந்தை தற்போது எங்களுக்கு மிகப்பெரியது. இலங்கைக்கு பயணம் செய்யும் இந்தியா்களின் எண்ணிக்கை 2,30,000 ஆகும், இது 5,00,000-க்கும் அதிகமாக வளரும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com