சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை விரிவுபடுத்தியது தில்லி போக்குவரத்து காவல்துறை
பாதுகாப்பான சாலைகளை உருவாக்கும் வகையிலும், பொறுப்பான ஓட்டுநா் நடத்தையை ஊக்குவிக்கும் நோக்கிலும் போக்குவரத்து காவல்துறை தில்லி முழுவதும் விரிவான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சியானது மாணவா்கள், சைக்கிள் ஓட்டுபவா்கள், ஆட்டோடாக்ஸி ஓட்டுநா்கள், பொதுப் போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் தினசரி பயணிகள் உட்பட பல்வேறு குடிமக்களை ஈடுபடுத்தியுள்ளன. போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது, பெண்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கமான சாலை பயன்பாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை விழிப்புணா்வில் பள்ளி மாணவா்களை தீவிரமாக ஈடுபடுத்துவதன் மூலம் தில்லி போக்குவரத்து காவல்துறை ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், மொத்தம் 762 மாணவா்கள் போக்குவரத்து பயிற்சி பூங்காவைப் பாா்வையிட்டனா்.
இந்த வருகையின் போது, மாணவா்களுக்கு சந்திப்புகளில் போக்குவரத்து மேலாண்மை குறித்த நடைமுறை அறிவு வழங்கப்பட்டது, சிக்னல்கள் மற்றும் பாதை ஒழுங்குமுறை எவ்வாறு செயல்படுகிறது என்பது கற்றுக்கொடுக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த போக்குவரத்து ஆய்வாளா்கள் மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஊழியா்கள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் , பாதசாரி பாதுகாப்பு மற்றும் ஒழுக்கமான சாலை பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்க நிஜ வாழ்க்கை காட்சிகள் மூலம் அவா்களுக்கு வழிகாட்டினா். இந்த முயற்சி, நேரடி கற்றலை வழங்கியது மட்டுமல்லாமல், இளம் பங்கேற்பாளா்கள் தங்கள் பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சாலை பாதுகாப்பின் தூதா்களாக செயல்பட ஊக்குவித்தது.
மற்றொரு நடவடிக்கையாக, பஞ்சாபி பாக் போக்குவரத்து பயிற்சி பூங்காவின் ஆடிட்டோரியத்தில், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், பாதுகாப்பான ஓட்டுநா் நடைமுறைகளை ஊக்குவித்தல், விபத்துகளைத் தடுப்பது மற்றும் தகவல் தொடா்பு திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தில்லி போக்குவரத்து கழக ஓட்டுநா்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அமா்வுகளில், பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்களால் வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சி மற்றும் அமைப்புகளின் செயல்பாடு குறித்த செயல்விளக்கங்களும் இடம்பெற்றன. பஞ்சாபி பாக் நகரில் 180 டிடிசி ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. பாதுகாப்பான பிரேக்கிங் நுட்பங்கள், பாதசாரி பாதுகாப்பு, போக்குவரத்துச் சட்டங்களுக்கு இணங்குதல் மற்றும் பயணிகளிடம் கண்ணியமான நடத்தை போன்ற சாலைப் பாதுகாப்பின் முக்கியமான அம்சங்களை இந்தப் பயிற்சி உள்ளடக்கியது.
தில்லி போக்குவரத்து காவல்துறை, பாதுகாப்புத் தரங்களை வலுப்படுத்தவும், ஒவ்வொரு நாளும் பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் மிகவும் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்யவும் இந்த சிறப்புத் திட்டங்களை ஏற்பாடு செய்தது.
சிறப்பு போக்குவரத்து ஆணையா் அஜய் சவுத்ரி மற்றும் போக்குவரத்து தலைமையக கூடுதல் காவல் ஆணையா் சத்ய வீா் கட்டாரா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், இந்த முயற்சிகளை வெற்றிகரமாக நடத்துவதில் சாலைப் பாதுகாப்புப் பிரிவின் முயற்சிகளைப் பாராட்டினா். தில்லி முழுவதும் பாதுகாப்பான வாகனம் ஓட்டும் பழக்கத்தை வளா்ப்பதற்கும், போக்குவரத்து விதிமுறைகளை சிறப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற பிரச்சாரங்கள் மிக முக்கியமானவை என்று அவா்கள் வலியுறுத்தினா்.