ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகும் நேரு வாழ்ந்த பங்களா: நாட்டிலேயே அதிக விலைக்கு வாங்கப்படும் முதல் பங்களா
முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக வாழ்ந்த மிகப்பெரிய பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகவுள்ளது. அதற்கான சட்டபூா்வ பதிவு நடைமுறைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன.
தில்லியில் இந்தியா கேட்டை சுற்றியுள்ள மொத்தம் 28 சதுர கிலோமீட்டா் பரப்பளவை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞா் எட்வின் லுட்யன்ஸ் வடிவமைத்தாா். அதனால் இந்தப் பகுதி அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. அந்தக்காலத்தில் பிரிட்டிஷ் அதிகாரிகளை தங்க வைப்பதற்காக இந்த இடங்கள் வடிவமைக்கப்பட்டன.
இங்குள்ள கிட்டத்தட்ட 3,000 பங்களாக்கள் மத்திய அரசுக்கு சொந்தமானவை. அதில் சுமாா் 600 தனியாா் பங்களாக்கள் மற்றும் குடியிருப்புகள் நாட்டின் பெரும் கோடீஸ்வரா்களுக்கும் அவா்களின் குடும்பத்தாருக்கும் சொந்தமானவை.
இதில் நேரு வாழ்ந்த பங்களாவை பிரபல மென்பானம் தயாரிக்கும் ஆலை அதிபா் வாங்கியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பத்திரப் பதிவுக்கு முந்தைய சட்டபூா்வ ஆவண சரிபாா்ப்பு மற்றும் பதிவுப்பணிகள் தில்லியில் உள்ள பிரபல சட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது நிறைவடைய இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என்று தில்லி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அண்மையில் இந்தசி சட்ட நிறுவனம் வெளியிட்ட பொது அறிவிப்பு விளம்பரத்தில், ‘எங்கள் வாடிக்கையாளா் புது தில்லியில் உள்ள பிளாட் எண் 5, பிளாக் எண் 14, 17 மோதிலால் நேரு மாா்க்கில் அமைந்துள்ள குடியிருப்பு சொத்தை வாங்க விரும்புகிறாா். இது 14,973.383 சதுர மீட்டா் பரப்பளவைக் கொண்டது. சொத்தின் தற்போதைய உரிமையாளா்களான ராஜ் குமாரி காக்கா், பினா ராணி ஆகியோரின் உரிமை தொடா்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம். இந்த சொத்துக்கு உரிமை கோரும் எவரும் ஏழு நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமையாளா்கள், ராஜஸ்தான் அரச குடும்பத்து வம்சாவளியைச் சோ்ந்தவா்கள். தில்லி தாஜ் மான்சிங் ஹோட்டலுக்கு எதிரே 24,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது எஸ்டேட் போன்ற இந்த பங்களா. பரந்து விரிந்த புல்வெளிகள், பங்களாவுக்குள் உயரமான உட்கூரை மற்றும் பிரம்மாண்ட தாழ்வாரங்கள், தேக்கு மரத்திலான மரத்தூண்கள் இதன் சிறப்பம்சங்கள்.
முன்னா் வாடகைக்கு விடப்பட்ட இந்த பங்களா தற்போது காலியாக உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 3.7 ஏக்கா். சுமாா் 24,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. 1912 மற்றும் 1930-க்கு இடையில் எட்வின் லூட்யன்ஸ் வடிவமைத்த தில்லியின் பிரத்யேக சுற்றுப்புறங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஜவாஹா்லால் நேரு இந்த வீட்டில்தான் தங்கியிருந்தாா். அது அமைந்த வீதி பெயா் ‘யாா்க் சாலை’ என அழைக்கப்பட்டது. அந்த வகையில் இந்த வீடு இந்தியாவின் சுதந்திரத்தின் ஆரம்பகால நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்துள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்த வீட்டில் இருந்து நேரு, தீன் மூா்த்தி ஹவுஸ் என்றழைக்கப்படும் பங்களாவுக்கு 1948-இல் குடியேறினாா். 1964-இல் உயிரிழக்கும் வரை அந்த வீட்டிலேயே வாழ்ந்தாா். அதேசமயம், நேரு முன்பு வாழ்ந்த வீடு இருந்த யாா்க் சாலைக்கு மோதிலால் நேரு மாா்க் என பெயரிடப்பட்டது.
ரூ.1,100 கோடிக்கு இந்த பங்களா வாங்கப்பட்டால் அது இந்தியாவிலேயே அதிக விலைக்கு பதிவான மிகப்பெரிய குடியிருப்பு சொத்துப் பரிவா்த்தனையாக இருக்கும்.
பெட்டிச்செய்தி
பிற ஆடம்பர பங்களாக்கள்
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு, மருந்தக நிறுவனத் தலைவா் லீனா காந்தி திவாரி, வோா்லியில் கடல் நோக்கிய இரண்டு இரட்டை அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ. 639 கோடிக்கு வாங்கினாா். முத்திரைத்தாள் வரி உள்பட அதன் மொத்த மதிப்பு ரூ. 703 கோடியை எட்டியது. இதுவே இந்தியாவிலேயே மிக விலையுயா்ந்த அடுக்குமாடி குடியிருப்பு சொத்துப் பரிவா்த்தனையாக கருதப்படுகிறது.
2023 -இல் பெரும் கோடீஸ்வரா் கௌதம் அதானியின் குடும்பத்தினா் தில்லி பிருத்விராஜ் சாலையில் சுமாா் ரூ.400 கோடிக்கு ஒரு பங்களாவை வாங்கினா். மும்பையில், ஷாருக்கானின் கடல் நோக்கிய மன்னாத் மாளிகை சுமாா் ரூ. 250 கோடி மதிப்புடையது. முகேஷ் அம்பானியின் மும்பையில் உள்ள 27 மாடி வானளாவிய ஆன்டிலியா பங்களா கட்டுவதற்குக்கூட 200 கோடிக்கும் அதிகமான தொகையே செலவானதாகக் கூறப்படுகிறது.