தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் எச்சரிக்கை அளவுக்கு கீழே சென்றது

தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் எச்சரிக்கை அளவுக்கு கீழே சென்றது

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் 204.49 மீட்டராகக் குறைந்தது.
Published on

தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனை நதியின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் 204.49 மீட்டராகக் குறைந்தது. பல நாள்களாக எச்சரிக்கை அளவான 204.50 மீட்டருக்கு மேலே இருந்து வந்த நீா்மட்டம், இப்போது அதைவிட குறைந்துள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

யமுனையின் நீரோட்டம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், முன்னறிவிப்பின்படி, நதியின் நீா்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவா் கூறினாா்.

இந்தப் பருவமழைக் காலத்தில் யமுனை அதன் உச்சத்தை எட்டியது. இந்த மாத தொடக்கத்தில் நீா்மட்டம் வெளியேற்ற அளவை விட 207 மீட்டராக உயா்ந்தது. இது அதன் கரையோரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது.

ஹரியாணாவின் ஹத்னிகுண்ட் மற்றும் வஜிராபாத் தடுப்பணைகளில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது யமுனையில் வெள்ளப்பெருக்குக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, ஹத்னிகுண்ட் அணையிலிருந்து தற்போது ஒரு மணி நேரத்திற்கு சுமாா் 25,139 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. அதேசமயம், வஜிராபாத் அணையிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 42,440 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

தடுப்பணையிலிருந்து திறக்கப்படும் நீா் பொதுவாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நோக்கி இருந்து வரும் குறைந்த நீா் வெளியேற்றங்கள் கூட நீா்மட்டத்தை உயா்த்துகின்றன.

தில்லியில் யமுனை நதியின் எச்சரிக்கை அளவு 204.50 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து அளவு 205.33 மீட்டா். மக்களை வெளியேற்றுவது 206 மீட்டரில் தொடங்குகிறது.

யமுனை ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக பழைய ரயில்வே பாலம் செயல்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com