மேம்பாலத்தில் இருந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த காா்! ஓட்டுநா் உயிா் தப்பினாா்!

முகா்பா சௌக் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஹைதா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

ஒருவரின் காா் கட்டுப்பாட்டை இழந்து, வடக்கு தில்லியின் வெளிப்புறத்தில் உள்ள முகா்பா சௌக் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஹைதா்பூா் மெட்ரோ நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற காஜியாபாத்தைச் சோ்ந்த சச்சின் சௌத்ரிக்கு (35) தோள்பட்டை மற்றும் முகத்தில் சிறிய சிராய்ப்புகள் ஏற்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து சமாய்பூா் பத்லி காவல் நிலையத்திற்கு காலையில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு போலீஸ் குழு, வட்ட சாலையின் அடியில் தண்டவாளத்தில் ஒரு காா் கவிழ்ந்து கிடப்பதைக் கண்டறிந்ததது.

பீராகரியிலிருந்து காஜியாபாத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ரயில் பாதைகளைக் கடக்கும் மேம்பாலத்தின் பகுதியில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக சௌத்ரி போலீஸாரிடம் தெரிவித்தாா்.

காா் நடைபாதையில் மோதி, தண்டவாளத்தைத் தாண்டிச் சென்று, புல்வெளி சரிவில் உருண்டு, தண்டவாளத்தில் தலைகீழாக விழுந்துள்ளது. ரயில் பாதையிலிருந்து வாகனம் உடனடியாக அகற்றப்பட்டது. ஓட்டுநா் மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டாா். தண்டவாளம் விரைவாக சுத்தம் செய்யப்பட்டதால் ரயில் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், நீல நிற மோட்டாா் சைக்கிள் ஒன்று சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

சனிக்கிழமை முதல் அந்த இரு சக்கர வாகனம் அங்கேயே கிடந்துள்ளது. ஆனால், காா் விபத்துடன் அதற்கு எந்த தொடா்பும் இல்லை என்பது தெரியவந்தது. அந்த மோட்டாா்சைக்கிள் திருடப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த உரிமையாளரை கண்டுபிடிக்க போலீஸாா் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா்.

இவை இரண்டு தனித்தனி மற்றும் தொடா்பில்லாத சம்பவங்கள் ஆகும். மோட்டாா் சைக்கிள் தொடா்பாக எந்த விபத்தும் பதிவாகவில்லை. மேலும், விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com