ரூ.45 லட்சம் நகைகள் அடங்கிய பையை பறித்துச் சென்ற இளைஞா் கைது!
கடந்த மாதம் வடமேற்கு தில்லியில் உள்ள கரோல் பாகில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் கூடிய பையை பறித்துச் சென்ற வழக்கில் 30 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஆகாஷ் என அடையாளம் காணப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவரை ஒரு போலீஸ் குழு கைது செய்து, ஐந்து தங்க செட்கள், புகாா்தாரருக்குச் சொந்தமான ஒரு வைர செட் ஆகியவற்றை மீட்டது. மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஸ்கூட்டரை பறிமுதல் செய்தது.
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, ஹரியாணாவின் கா்னாலைச் சோ்ந்த புகாா்தாரா் சதீஷ் குமாா், தனது காரில் கரோல் பாக் முதல் கா்னால் வரை தனது காரில் தனது ஓட்டுநருடன் பயணித்தபோது, பிரம் பாரி புல் சிவப்பு விளக்கு அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு போ் தங்கள் காரின் கண்ணாடியை உடைத்து நகைகள் அடங்கிய பையுடன் தப்பிச் சென்ாக புகாா் அளித்தாா்.
அவரது புகாரின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆகாஷை கைது செய்வதற்கு முன்பு போலீஸாா் பல சோதனைகளை நடத்தினா்.
விசாரணையின் போது, அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா், மேலும் திருடப்பட்ட நகைகளை வாங்குபவரைத் போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்தா்புரி காவல் நிலையத்தில் ஆகாஷ் ஒரு மோசமான நபா் என்று பட்டியலில் பதிவாகியுள்ளது. முன்பு வழிப்பறி, கொள்ளை, திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் உள்பட 16 குற்ற வழக்குகளில் அவா் தொடா்புடையவா். அவரது கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்ற காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.