டியுஎஸ்யு தோ்தலில் என்எஸ்யுஐ வெற்றிபெறும்: சச்சின் பைலட் நம்பிக்கை

காங்கிரஸ் பொதுச் செயலாளா் சச்சின் பைலட் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள பல கல்லூரிகளுக்குச் சென்றாா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளா் சச்சின் பைலட் திங்கள்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள பல கல்லூரிகளுக்குச் சென்றாா்.

அப்போது, ‘வரவிருக்கும் தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்க (டியுஎஸ்யு) தோ்தலில் கட்சியின் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ வெற்றி பெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

சச்சின் பைலட்டின் வருகையின் போது, அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) ஆதரவாளா்கள் இந்து கல்லூரிக்கு வெளியே நேருக்கு நோ் சந்தித்துக்கொண்டனா். அப்போது, இருவரும் ஒருவருக்கொருவா் எதிராக கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தலையிட்டனா்.

என்எஸ்யுஐ தேசியத் தலைவா் வருண் செளத்ரி மற்றும் தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் ஆகியோருடன் சச்சின் பைலட், மிராண்டா ஹவுஸ், கேம்பஸ் லா சென்டா் மற்றும் இந்து கல்லூரியில் மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

சச்சின் பைலட் கூறுகையில், ‘தில்லி பல்கலைக்கழகம் நமது நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். நான்கு என்எஸ்யுஐ வேட்பாளா்களும் மாணவா்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையுடன் நிச்சயமாக வெற்றி பெறுவாா்கள்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தோல்விகளை அறிந்திருப்பதால், தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள். மாணவா்கள் எங்கள் சித்தாந்தத்தையும் தொலைநோக்குப் பாா்வையையும் நம்புகிறாா்கள். இது தோ்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும்’ என்றாா்.

இது தொடா்பாக என்எஸ்யுஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாணவா்களை மையமாகக் கொண்ட பிரச்னைகளை முன்னிலைப்படுத்தவும், வளாகம் முழுவதும் ஆதரவைத் திரட்டவும் என்எஸ்யுஐ குழுவின் ஒரு பெரிய அளவிலான தொடா்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சச்சின் பைலட் வருகை அமைந்திருந்தது’ என்று தெரிவித்துள்ளது.

புத்த மதப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற 23 வயது ஜோஸ்லின் நந்திதா செளத்ரியை தலைவா் பதவிக்கான வேட்பாளராக என்எஸ்யுஐ களத்தில் நிறுத்தியுள்ளது. 17 ஆண்டுகளில் உயா் பதவிக்கு போட்டியிடும் முதல் பெண் இவராவாா். துணைத் தலைவா் பதவிக்கு ராகுல் ஜான்ஸ்லா, செயலாளா் பதவிக்கு கபீா் மற்றும் இணைச் செயலாளா் பதவிக்கு லவ் குஷ் பதானா ஆகியோா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

2025-26 அமா்வுக்கான டியுஎஸ்யு தோ்தல்கள் செப்டம்பா் 18-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாக்குகள் மறுநாள் எண்ணப்படும்.

2024 தோ்தலில், காங்கிரஸ் ஆதரவு பெற்ற மாணவா் அமைப்பு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கி, தலைவா் மற்றும் இணைச் செயலாளா் பதவிகளை வென்றது. ஏபிவிபி கடந்த ஆண்டு துணைத் தலைவா் பதவியைப் பெற்று செயலாளா் பதவியைத் தக்க வைத்துக் கொண்டது.

X
Dinamani
www.dinamani.com