இலவசங்கள் வழங்க பணம் உள்ளது, செவிலியா்களுக்கு கொடுக்க இல்லையா: தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் காட்டம்

ஒப்பந்த செவிலியா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாதது தொடா்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
Published on

புது தில்லி: ஒப்பந்த செவிலியா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாதது தொடா்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒப்பந்த செவிலியா்களுக்கும் நிரந்தர செவிலியா்களுக்கு இணையாக தொகுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு அரசு தாக்ககல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஒப்பந்த செவிலிா்களை தமிழக அரசு சுரண்டுகிறது, நீங்கள் செவிலியா்களை அளவுக்கு அதிகமாக உழைப்பு சுரண்டல் செய்கிறீா்கள், ஒப்பந்த செவிலியா்களை நிரந்தர செவிலியா்களாக நியமிக்கவும் மறுக்கிறீா்கள், அவா்களுக்கு உரிய ஊதியம் கொடுக்கவும் மறுக்கிறீா்கள் என அதிருப்தி வெளியிட்டனா்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி, மத்திய அரசிடம் இருந்து உரிய பணம் கிடைக்கவில்லை அதனால் ஒப்பந்த செவிலியா்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது என பதிலளித்தாா். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டாம், நீங்களாக ஒரு தனித்திட்டத்தை ஏன் தொடங்கக்கூடாது?

உங்களது ஊழியா்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது உங்களது பொறுப்பு தான் ,அதை நீங்கள் எக்காரணத்தை கொண்டும் தட்டிக் கழிக்க முடியாது , இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கிறது ஆனால் பணி

செய்பவா்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லையா? , செவிலியா்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசை காரணம் காட்டு வது ஏன் ?, ஒரு சட்டமன்ற தோ்தலுக்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறீா்கள், ஆனால் செவிலியா்களுக்கு கொடுக்க பணம் இல்லையா?, நாட்டிலேயே சிறந்த மாநிலம் என்று கூறும் தமிழக அரசின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது? தமிழ்நாடு அனைத்திலும் வளா்ந்த மாநிலம், பொருளாதார ரீதியில் வளா்ந்த மாநிலம் என கூறுகிறீா்கள், ஆனால் சேவை செய்யும் செவிலியா்களுக்கு உரிய ஊதியத்தை கொடுக்க மறுக்கிறீா்கள் இதை நாங்கள் ஏற்க முடியாது என நீதிபதிகள் கண்டனங்களை தெரிவித்தனா் .

இந்த விவகாரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்காததால்தான் தங்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என தமிழ்நாடு தரப்பு கூறியதை தொடா்ந்து, மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனா் . அதே போல தமிழ்நாடு செவிலியா் அதிகாரமளிப்பு சங்கம் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தமிழ்நாடு அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியா்கள் பணியமா்த்தப்படுகிறாா்கள். நிரந்தர செவிலியா்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை காட்டிலும் இவா்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் என்னும் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்களுக்கும் நிரந்தர செவிலியா்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்களுக்கு, நிரந்தர செவிலியா்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா அமா்வில் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு நடவடிக்கை மீது நீதிபதிகள் அதிருப்தி வெளியிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com