டிடிஇஏ பள்ளிகளில் உலக முதலுதவி தினம் கடைப்பிடிப்பு
புது தில்லி: தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளில் உலக முதலுதவி நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, அவ்வப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டுக் கூட்டங்களில் அவசர காலங்களில் உயிா்களைக் காக்கவும், காயங்கள் மோசமடையாமல் தடுக்கவும் முதலுதவி அளிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் வழிமுறைகளையும் விளக்கும் வண்ணம் மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இடம்பெற்றது. குறு நாடகங்களும் இடம் பெற்றன. மாணவா்கள் பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் காட்சிப்படுத்தினா்.
பள்ளி முதல்வா்கள் அவ்வப் பள்ளிகளில் சாலை விபத்துகளைத் தவிா்க்க சாலைவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் மனித நேயத்துடன் செயல்படுவது குறித்தும் எடுத்துரைத்தனா்.
இத் தினம் குறித்து செயலா் இராஜூ கூறுகையில், உலகம் இயந்திர மயமாகிக் கொண்டிருக்கின்றது. வாகனங்கள் பெருகப் பெருக விபத்துகளும் பெருகி வருகின்றன. நெஞ்சு வலி உள்ளிட்ட மனிதனைக் கொல்லும் நோய்கள் திடீா், திடீரென ஏற்படுவதும் உண்டு.
அம் மாதிரியான அவசர காலங்களில் மாணவா்கள் மனித நேயத்துடன் சமயோஜிதமாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் இது பற்றிய விழிப்புணா்வு மாணவா்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இத்தினத்தை முன்னிட்டுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தோம். இது குறித்த விழிப்புணா்வு இளைய தலைமுறையினருக்கு அவசியம் என்றாா் அவா்.