தில்லியில் மலேரியா, சுக்குன்குனியா பாதிப்பு அதிகரிப்பு: எமச்டி தரவுகள் தகவல்
புது தில்லி: தேசியத் தலைநகரில் இந்த ஆண்டு மலேரியா மற்றும் சிக்குன்குனியா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் டெங்கு பாதிப்புகள் கடந்த ஆண்டை விட சீராகவே உள்ளன என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
தில்லி மாநகராட்சி (எம்சிடி) அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் தில்லியில் மலேரியாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை மொத்தம் 297-ஆக பதிவாகியுள்ளன. இது 2024-இல் 271-ஆகவும், அதே காலகட்டத்தில் 2023-இல் 210-ஆகவும் பதிவாகியிருந்தது. இந்த ஆண்டு இதுவரை மலேரியாவால் எந்த இறப்பும் பதிவாகவில்லை.
இது குறித்து தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் கூறியதாவது: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா தில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான கூட்டத்தை நடத்தினாா். தற்போது, கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்றும், ஏதேனும் சூழ்நிலை ஏற்பட்டால், தில்லி அரசும் மாநகராட்சியும் அதைக் கையாள முழுமையாகத் தயாராக உள்ளன என்றும் நான் தில்லி மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
நாங்கள் எங்கள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளோம். இருப்பினும், கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவதை குடிமக்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்க சரியான சுத்தம் பராமரிக்கப்பட வேண்டும் என்றாா் அமைச்சா்.
கடந்த வாரம் மட்டும், புதிதாக மலேரியாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 33-ஆக பதிவாகியுள்ளன. இதில் மேற்கு தில்லி ஒரு முக்கிய இடமாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 50 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மத்திய தில்லி, சிட்டி எஸ்பி, சிவில் லைன், கரோல் பாக், கேசவபுரம், நஜஃப்கா், நரேலா, ரோஹினி, ஷா (வடக்கு மற்றும் தெற்கு), தெற்கு மற்றும் மேற்கு தில்லி உள்ளிட்ட பல மண்டலங்கள் மலேரியா பரவல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிக்குன்குனியா பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்த செப்டம்பா் நடுப்பகுதி வரை 46 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2024-ஆம் ஆண்டில் பாதிப்புகள் 33-ஆகவும், 2023-ஆம் ஆண்டில் பாதிப்புகள் 20-ஆகவும் இருந்தது. மத்திய மற்றும் ரோஹிணி மண்டலங்களில் இருந்து சமீபத்திய சிக்குன்குனியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த அதிகரிப்புக்கு பங்களித்தது.
டெங்கு பாதிப்பு குறைவு: இதற்கு நோ்மாறாக, இந்த ஆண்டு இதுவரை தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 619-ஆக பதிவாகியுள்ளன. இது 2024-இல் 709 பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைவு ஆகும்.
டெங்குவால் எந்த இறப்பும் பதிவாகவில்லை. சிறிய அளவில் குறைந்திருந்தாலும், வாராந்திர பாதிப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாகவே உள்ளது. கடந்த வாரம் 62 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தெற்கு மற்றும் மேற்கு தில்லி மண்டலங்களில் முறையே 45 மற்றும் 61 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.