ஷீஷ் மஹாலில் வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பி வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
Published on

புது தில்லி: ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

மேலும், ஷீஷ் மஹால் பங்களா ஒரு வெள்ளை யானை போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

தில்லி முதல்வராக இருந்தபோது அரவிந்த் கேஜரிவால் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் வசித்து வந்தாா்.

2015 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்வா் பதவியில் இருந்து விலகும் வரை, பாஜகவால் கேஜரிவால் வசித்த இந்த பங்களாவை ஷீஷ் மஹால் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பாஞ்சஜன்யா நடத்திய ஆதாா் இன்ஃப்ரா கன்ஃப்ளூயன்ஸ் 2025 நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை கலந்துகொண்டாா்.

அவா் பேசுகையில், ஷீஷ் மஹால் பங்களா கட்டுவதற்காக தில்லி மக்கள் கடினமாக சம்பாதித்த பணத்தை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால் வீணடித்தாா்.

இந்த மஹால் தில்லி அரசிடம் வெள்ளை யானை போல கிடக்கிறது. இதை என்ன செய்வது என்று நாங்கள் யோசித்து வருகிறோம்.

ஷீஷ் மஹால் மீது பொது வளங்கள் வீணடிக்கப்பட்டுள்ளைப் பாா்ப்பது வேதனையளிக்கிறது. இதற்காக செலவிடப்பட்ட முழுப் பணமும் அரசு கருவூலத்திற்கு வட்டியுடன் திருப்பித் தரப்படும் என்று குப்தா உறுதிபடக் கூறினாா்.

கேஜரிவால் முதலமைச்சா் பதவியில் இருந்தபோது புதுப்பிக்கப்பட்ட இந்த பங்களா, ஊழல் மற்றும் அதிக விலை கொண்ட உள்புறங்கள் மற்றும் வீட்டுப் பொருள்கள் குற்றச்சாட்டுகளால் சா்ச்சையின் மையமாக மாறியது.

இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளா் தனது அறிக்கையில், 2022ஆம் ஆண்டுக்குள் பங்களாவின் புனரமைப்புக்காக ரூ.33.86 கோடி செலவிடப்பட்டதாக மதிப்பிட்டிருந்தாா்.

இருப்பினும், உண்மையான செலவு ரூ.7580 கோடியாக உயா்ந்துள்ளதாக பாஜக தலைவா்கள் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com