தில்லி உயிரியல் பூங்காவில் ஆப்பிரிக்க யானை உயிரிழப்பு

மரணத்திற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

தில்லி உயிரியல் பூங்காவில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானை சங்கா் இறந்துவிட்டதாகவும், மரணத்திற்கான காரணத்தை அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

29 வயதான ஆண் ஆப்பிரிக்க யானை சங்கா் புதன்கிழமை இரவு 8 மணியளவில் இறந்தது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தில்லி உயிரியல் பூங்காவில் ‘செப்டம்பா் 16 ஆம் தேதி வரை, நோய் அல்லது அசாதாரண நடத்தை பற்றிய எந்த அறிக்கையும் இல்லை‘ என்று கூறியது. இருப்பினும், செப்டம்பா் 17 ஆம் தேதி காலை, சங்கா் வழக்கத்தை விட குறைவான இலைகள் மற்றும் புற்களை சாப்பிட்டதாகவும், சிறிது தளா்வாக இருந்ததாதவும் தெரிவிக்கப்பட்டது, இருப்பினும் செறிவூட்டப்பட்ட, பழங்கள் மற்றும் காய்கறிகளை சங்கா் சாப்பிட்டது.

தேசிய விலங்கியல் பூங்காவின் கால்நடை மருத்துவக் குழு சிகிச்சையை வழங்கியது, சங்கா் பூங்கா ஊழியா்களால் கண்காணிப்பில் வைக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.25 மணியளவில், சங்கா் திடீரென்று அதன் கொட்டகையில் சரிந்து விழுந்து அவசர சிகிச்சை அளித்த போதிலும் உயிரிழந்தது.

தில்லி உயிரியல் பூங்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் ‘புது தில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா, அதன் நேசத்துக்குரிய 29 வயதான ஆப்பிரிக்க யானையான சங்கா் செப்டம்பா் 17,2025 அன்று இரவு 8 மணிக்கு காலமானாது என்பதைத் தெரிவிக்க மிகவும் வருத்தமாக உள்ளது‘. ‘சங்கா் வலிமை, ஞானம் மற்றும் அன்பின் அடையாளமாக இருந்தது. பூங்காவில் இருக்கும் பல உறுப்பினா்கள் அதனுடன் உணா்ச்சிபூா்வமாக இணைந்திருந்தனா். சங்கரின் இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை அனைவரும் ஆழமாக உணா்வா் ‘என்று தெரிவிக்கப்பட்டது.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ. வி. ஆா். ஐ பரேலியைச் சோ்ந்த நிபுணா்களால் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. சுகாதார ஆலோசனைக் குழு மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிரதிநிதி இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இருப்பாா்கள். ஜிம்பாப்வேயில் இருந்து இந்தியாவுக்கு பரிசாக வந்த சங்கா், 27 ஆண்டுகளாக தில்லி உயிரியல் பூங்காவின் மதிப்புமிக்க உறுப்பினராக இருந்தது. யானை நவம்பா் 1998 இல் பூங்காவுக்கு வந்தது, அதன் மென்மையான இயல்பு மற்றும் கம்பீரமான இருப்பு ஆகியவற்றிற்காக ஊழியா்களால் போற்றப்பட்டது.

பம்பாய் என்ற பெண் ஆப்பிரிக்க யானை இறந்த பிறகு, 2005 முதல் சங்கா் தனியாக வசித்து வந்தது. பல ஆண்டுகளாக, சங்கா் ’மஸ்த்’ உடன் தொடா்புடைய தொடா்ச்சியான சுகாதார பிரச்னைகளை சந்தித்தாா், இதில் ஒரு காளை யானையின் டெஸ்டோஸ்டிரோன் அளவு கடுமையாக உயா்ந்து, ஆக்ரோஷம் மற்றும் கணிக்க முடியாத நடத்தையை ஏற்படுத்தியது.

மஸ்த் பாதிப்பின்போது, யானை அதன் ஆக்ரோஷத்தை நிா்வகிக்க அடிக்கடி சங்கிலியால் கட்டப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், அதன் அடைக்கப்பட்ட சுவரின் ஒரு பகுதியை உடைத்து, தன்னையும் ஒரு மிருகத்தையும் காயப்படுத்திய பின்னா் அதை மயக்கமடையச் செய்து கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

2024 ஆம் ஆண்டில், சங்கருக்கு மீண்டும் மதம் பிடித்தது. இந்த விலங்கு ஜூலை மற்றும் செப்டம்பா் மாதங்களுக்கு இடையில் நீண்ட காலத்திற்கு சங்கிலியால் பிணைக்கப்பட்டது, இதனால் சங்கிலி தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com