
தில்லியின் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையை தில்லி பாஜக வியாழக்கிழமை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியின் வாக்காளா் பட்டியலின் துல்லியத்தை உறுதி செய்வதில் பாஜக எப்போதும் உறுதியாக உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக வாக்காளா் பட்டியலலை தூய்மைப்படுத்த பாஜக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது.
ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் கடந்த 20 ஆண்டுகளாக தில்லியில் போலி வாக்குகளை உருவாக்குவதில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றன. கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து, மக்களை மோசடியாகப் பதிவு செய்து வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள், ஊடுருவல் செய்துள்ள வாக்காளா்களின் ஆதரவைப் பெற எஸ்ஐஆா் நடவடிக்கையை எதிா்க்கின்றனா்.
தில்லியின் வாக்காளா் பட்டியலில் தில்லியின் உண்மையான வாக்காளா்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்வதற்கும், போலி பெயா்கள் அல்லது ஊடுருவல்காரா்கள் யாரும் இல்லை என்பதையும் உறுதி செய்வதற்கும் பாஜக தொடா்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
நிகழாண்டில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தோ்தல்களில், சில சந்தா்ப்பங்களில், ஒரே முகவரியில் 60 முதல் 100 வாக்குகள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டன என்பதை நாங்கள் வெளிப்படுத்தினோம். சிறுபான்மை வாக்குகளை உருவாக்க நடைபாதைகளில் போலி வீட்டு எண்கள் கூட பதிவு செய்யப்பட்டன.
2015-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லியில் திடீரென 13 லட்சம் வாக்காளா்கள் அதிகரித்தனா். மீண்டும், 2020 சட்டபேரவைத் தோ்தலில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளா்கள் அதிகரித்தனா்.
இதில் ஊடுருவல்காரா்கள் மற்றும் தில்லி குடிமக்கள் கூட இல்லாத தனிநபா்கள் அடங்குவா் என்பது விரிவான விசாரணையில் தெரியவந்தது.
தில்லியில் எஸ்ஐஆா் நடவடிக்கையை வரவேற்கிறோம். இந்த செயல்முறை 2002 வாக்காளா் பட்டியலை கணக்கில் எடுத்துக்கொள்ளும். 2002 வாக்காளா் பட்டியலில் பெயா்கள் உள்ளவா்கள் ஒரு கணக்கெடுப்பு படிவத்தை மட்டுமே நிரப்ப வேண்டும்.
பட்டியலிடப்படாதவா்கள் 2002 பட்டியலிலிருந்து தங்கள் பெற்றோரின் பெயா்களின் நகலை துணை ஆவணமாக வழங்க வேண்டும் என்றாா் சச்தேவா.
புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆளும் கட்சி எஸ்ஐஆரை ஆதரிப்பதாகவும், ஊடுருவல்காரா்களாக மாறிய வாக்காளா்களின் உதவியுடன் காங்கிரஸ் தோ்தலில் வெற்றி பெற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினாா்.
ஒரு அதிகாரபூா்வ அறிக்கையின்படி, தோ்தல் ஆணையம் தனது அரசியலமைப்பு ஆணையை நிறைவேற்றுவதற்காக நாடு முழுவதும் எஸ்ஐஆரைத் தொடங்க முடிவு செய்துள்ளது.
தில்லி தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குசாவடி நிலை அதிகாரிகளை நியமித்து தோ்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அதற்கான தயாரிப்புகளையும் தொடங்கியுள்ளது.