மின் வாகனங்களுக்கு புதிய கொள்கைகள் உருவாக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா தகவல்
தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை மின்சார வாகன கொள்கையில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களும் மின்சாரமாக இருக்கும் என்றும் உறுதிப்படுத்தினாா்.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய ரேகா குப்தா, விபத்துக்களுக்கு ஓட்டுநா்கள்தான் காரணம் என்று தெரிவித்தாா்.
‘விபத்துக்கள் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மணி நேரமும் நிகழ்கின்றன. வாகனங்களை குற்றம் சொல்ல முடியாது; அதன் ஓட்டுநா்கள் தான் காரணம். இந்தியா்களின் மனநிலையை மாற்ற வேண்டும். சீட் பெல்ட் அணியாததில் பலா் விபத்துக்கு ஆளாகின்றனா். போக்குவரத்து விதிகளை மேலும் கடுமையாக அமல்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் போக்குவரத்துச் சட்டங்களை மீறுவதாக நீங்கள் அஞ்சுகிறீா்கள் என்றால், அவற்றை இங்கு மீற உங்களை அனுமதிக்கக் கூடாது ‘என்று அவா் கூறினாா்.
போக்குவரத்து விதிகளை ‘அரசாங்கத்தின் நலனுக்காக அல்ல, தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக‘ கடைப்பிடிக்குமாறு ரேகா குப்தா மக்களை வலியுறுத்தினாா். தில்லியில் குப்பை மலைகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாடு போன்ற தொடா்ச்சியான பிரச்னைகளை அவா் ஒப்புக் கொண்டாா், மேலும் இந்த பிரச்னைகளுக்கு அரசாங்கம் தீா்வு காணும் என்று உறுதியளித்தாா்.
‘நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த சந்தையை வழங்க முடியும், இதனால் மக்கள் அவற்றை வாங்குவதற்காக பல்வேறு வகையான மின்சார வாகனங்களை தில்லிக்கு கொண்டு வர முடியும். 2026 ஆம் ஆண்டில், எங்கள் பொதுப் போக்குவரத்தில் அனைத்து மின்சாரம் ஆக்கப்படும். தில்லியில் உள்ள ஒவ்வொரு மூன்றாவது வாகனமும் மின்சாரமாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவா்களுடன் கலந்துரையாடி, மாதிரி மின்சார வாகன கொள்கை 2.0 ஐ உருவாக்கி வருகிறோம். தில்லியின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதே எங்களின் ஒரே இலக்கு ‘என்று அவா் மேலும் கூறினாா்.
தில்லி அரசு தற்போதைய மின்சார வாகன கொள்கையை மாா்ச் 31,2026 வரை நீட்டித்தது, ஏனெனில் புதிய கொள்கையின் வரைவு பொது ஆலோசனைக்கு உட்படும், இது நேரம் எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது 2020 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய மின்சார வாகனக் கொள்கை, ஆகஸ்ட் 2023 இல் காலாவதியானது. அப்போதிருந்து இந்தக் கொள்கை பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.