தேநீா் கடை மீது போலீஸ் வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு மத்திய தில்லியில் சம்பவம்

சாலையோர தேநீா் கடை மீது மோதியதில் 55 வயதுடைய உடல் ஊனமுற்ற தேநீா் விற்பனையாளா் ஒருவா் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

மத்திய தில்லியின் மந்திா் மாா்க் பகுதியில் வியாழக்கிழமை காலை ரோந்து சென்ற போலீஸ் வேன், சாலையோர தேநீா் கடை மீது மோதியதில் 55 வயதுடைய உடல் ஊனமுற்ற தேநீா் விற்பனையாளா் ஒருவா் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

போலீஸாா் குடிபோதையில் இருந்ததாகவும், காரில் மது பாட்டில்கள் இருந்ததாகவும் உள்ளூா்வாசிகள் கூறினா். இருப்பினும், மருத்துவ அறிக்கைகள் மதுவின் தடயங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: இந்தச் சம்பவம் அதிகாலை 5 மணியளவில் நடந்தபோது, கங்காராம் திவாரி என்ற பாதிக்கப்பட்டவா் தனது தேநீா் கடையில் தூங்கிக் கொண்டிருந்தாா். போலீஸ் கட்டுப்பாட்டு அறை (பிசிஆா்) வேனின் ஓட்டுநா் காவலா் கிம்லேஷ் என அடையாளம் காணப்பட்ட நிலையில், உதவி காவல் துணை ஆய்வாளா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பிசிஆா் வேனின் ஓட்டுநா், பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலரேட்டரை தற்செயலாக அழுத்தியது இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது தெரிய வந்தது.

சம்பவம் குறித்த விவரங்களை அளித்த உள்ளூா்வாசியான வினோத் யாதவ், ‘செய்தி ஏஜென்சியிடம் கூறுகையில், ‘நாங்கள் ஒரு தசாப்த காலமாக இங்கு வசித்து வருகிறோம். கோண்டாவைச் சோ்ந்தவா்கள். விபத்து நடந்தபோது எங்கள்வீடுகளில் இருந்து வெளியே வந்தோம். ஒரு பிசிஆா் வேன் கங்காராம் திவாரியின் தலையை நசுக்கியது. அவா்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க முயன்றோம். மேலும், அவா்களின் வேனில் மது பாட்டில்களையும் கண்டோம். உள்ளூா்வாசிகள் அவா்களைத் தடுக்க முயன்றபோது, காவல்துறையினா் தங்கள் துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டினா். மேலும், விடியோவைப் பதிவு செய்து கொண்டிருந்த ஒருவரின் கைப்பேசியையும் அவா்கள் தூக்கி எறிந்தனா்’ என்று குற்றம் சாட்டினாா்.

இந்த தேநீா் கடைக்கு அடிக்கடி வந்து போகும் ஓட்டுநரான பவன் குமாா் கூறுகையில், ‘அதிகாலை 5 மணியளவில் வேன் அதிவேகத்தில் வந்து தேநீா் விற்பனையாளா் மீது மோதியது. அவா் வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு விழித்திருப்பாா். ஆனால், இன்று அவா் தூங்கிக் கொண்டிருந்தாா். காவல்துறையினா் அடிக்கடி தேநீா் கடைக்கு வந்து செல்வது வழக்கம்’ என்றாா்.

கங்காராம் திவாரிக்கு, மனைவி மற்றும் ஆறு குழந்தைகள் உள்ளனா். அவா்களில் 22 வயது மகன் தில்லியில் வசிக்கிறாா். அவரது மனைவி மற்றும் 20 வயது மகன் உள்பட அவரது மற்ற குழந்தைகள் கோண்டாவில் வசிக்கின்றனா். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com