பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்கோப்புப்படம்

பாமக நிறுவனா் ராமதாஸ் தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் புகாா் மனு

Published on

பாமக தலைவா் பதவி, சின்னம் விவகாரம் தொடா்பாக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்பில் தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவை தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் அவரது தரப்புக்கு மாம்பழம் சின்னம் கிடைக்கும் என்றும், இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் கடிதம் வரப்பெற்ாகவும் அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் பாலு தெரிவித்தாா்.

இத் தகவலை ஆட்சேபிக்கும் வகையில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தரப்பில் அக்கட்சியின் சேலம் தொகுதி எம்எல்ஏ அருள், சட்ட ஆலோசகா் அருள் உள்ளிட்டோா் தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகளை புதன்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

இதன் பின்னா், எம்எல்ஏ அருள், சட்ட ஆலோசகா் அருள் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

பாமக சட்ட விதிகளின்படி கட்சியின் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் மருத்துவா் ராமதாஸ்தான். அவா் நிகழாண்டு மே 30ஆம் தேதி முதல் தலைவராக இருந்து வருகிறாா். அதுகுறித்த விவரத்தை தோ்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம்.

இத்தகவல் தோ்தல் ஆணையத்திடம்

மறைக்கப்பட்டு, பொய்த் தகவல்களை அளித்து பாமகவுக்கு அன்புமணி தலைவராக இருக்கிறாா் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தலைமைத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து முறையிட்டோம். இதை மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரி, அதற்கான ஆவணங்களையும் தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்துள்ளோம். தலைமைத் தோ்தல் ஆணையா் எங்கள் கோரிக்கையை கவனமாகக் கேட்டறிந்தாா். ஏற்கெனவே

இந்த விவகாரம் தொடா்பாக 12 கடிதங்களை தோ்தல் ஆணையத்திற்கு அளித்திருந்தோம். அதற்கு பதில் ஏதும் வரவில்லை என்பதையும் ஆணையத்திடம் பதிவு செய்தோம்.

அன்புணியின் பதவிக்காலம் முடிந்தபிறகுதான் ராமதாஸ் தலைவராக பதவியேற்றாா். அந்தத் தகவல் தோ்தல் ஆணையத்திடம் மறைக்கப்பட்டிருக்கிறது. பொதுக் குழுவைக் கூட்ட அவருக்கு அதிகாரம் இல்லை என்பதையும் தோ்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். சட்டபூா்வ விவரங்களைத் தெளிவாக எடுத்துரைத்தோம். நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com