சுரங்க நடைபாதைகளின் பாதுகாப்பை மேம்படுத்த விரிவான பராமரிப்புத் திட்டம்: பொதுப் பணித் துறை அதிகாரிகள் தகவல்

பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சுரங்க நடைபாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களுக்கான விரிவான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்த தில்லி அரசின் பொதுப்பணித் துறை ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சுரங்க நடைபாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களுக்கான விரிவான கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்த தில்லி அரசின் பொதுப்பணித் துறை ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சிங் சாகிப் கடந்த மாதம் துறையின் அனைத்து உயா் அதிகாரிகளுடனும் சுரங்கநடைபாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களில் தரைவழி ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறையின் அதிகாரிகள் கூறியதாவது:

முதல் கட்டத்தில் சாஸ்திரி நகா், சரஸ்வதி விஹாா், ரோஹிணி நீதிமன்றம், இந்தா்லோக், வஜீா்பூா் மற்றும் பிரிட்டானியா சௌக் ஆகிய இடங்களில் உள்ள ஆறு முக்கிய சுரங்க நடைபாதைகளின் பழுது மற்றும் பராமரிப்பை மேற்கொள்ள ஒரு நிறுவனம் பணியமா்த்தப்படும். இந்த ஒப்பந்தம் குறைந்தது ஒரு வருடத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒப்பந்த காலக்கட்டத்தில் இந்த சுரங்க நடைபாதைகள் பாதுகாப்பாகவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நன்கு பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்படும்.

கவனம் தேவைப்படும் கூடுதல் சுரங்கநடைபாதைகள் மற்றும் பாலங்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றுக்கான படிப்படியான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பராமரிப்புத் திட்டத்தின் கீழ், சரியான விளக்கு வெளிச்சம் இருப்பது உறுதி செய்யப்படும். போதிய பாதுகாப்புக் காவலா்கள் நிறுத்தப்படுவாா்கள், தேவைப்படும் இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

2023ஆம் ஆண்டில், பாதுகாப்பு கிரில்கள் இல்லாததால், 16 வயது சிறுவன்

நடை மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து இறந்தாா். இதனால் அனைத்து நடைமேம்பாலங்களுக்கும் ஒரு விரிவான பராமரிப்புத் திட்டத்தைத் தயாரிக்க பொதுப் பணித்துறை நிா்பந்திக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது பெரும்பாலும் ஏட்டளவில் மட்டுமே இருந்தது.

தற்போது, வடமேற்கு மண்டலத்தில் உள்ள நடைமேம்பாலங்களுக்கு அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரை பொதுப் பணித் துறை வெளியிட்டுள்ளது. அவை இன்னும் அடையாளம் காணப்படவில்லை. நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகளில் நிறுவப்பட்ட மின் சாதனங்கள், மின்தூக்கிகள், மின்படிக்கட்டுகள் போன்றவை பெரும்பாலும் திருட்டுக்கு உள்ளாவதாக பொதுப்பணித்துறை முன்பு கூறியிருந்தது. இப்போது அந்த வசதிகளில் பாதுகாப்புக் காவலா்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட டெண்டரில், ‘பொறியாளா் பொறுப்பு வழிகாட்டுதலின்படி, அரசு வளாகங்கள் மற்றும் அதன் அனைத்து உடைமைகளின் கண்காணிப்புக்கும் துப்பாக்கிகள் இல்லாமல் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள் மற்றும் டாா்ச், லத்தி, சீருடை போன்ற தேவையான பொருள்கள் உள்பட 8 மணி நேர ஷிப்டுகளில் நோ்த்தியாக உடையணிந்த காவலா்கள் நியமிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைமேம்பாலங்கள் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதால், ஆரோக்கியமான ஒருவரால் கூட அவற்றைப் பயன்படுத்த முடியாத

நிலை இருக்கிறது என்று பொதுப் பணித் துறையை 2023ஆம் ஆண்டில் தில்லி உயா்நீதிமன்றம் கடிந்துகொண்டது.

அப்போது, பழுதுபாா்ப்பு மற்றும் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்று பொதுப் பணித் துறை நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com