சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி
சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதிபடங்கள் | ஏஎன்ஐ, பிடிஐ

தலைமறைவாகியுள்ள சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதி கேமரா மூலம் மாணவிகளை கைபேசியில் கண்காணித்துள்ளாா்: தில்லி காவல்துறை

Published on

தென்மேற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், 17 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதி, கழிப்பறைகளுக்கு வெளியேயும் வளாகம் முழுவதும் பொருத்தப்பட்ட கேமராக்கள் உட்பட விடுதி சிசிடிவிக்கள் மூலம் மாணவிகளை நேரடியாக தனது கைபேசியில் கண்காணித்ததாக வியாழக்கிழமை போலீசாா் தெரிவித்தனா்.

ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் நிா்வாகியாகியான சைதன்யானந்த சரஸ்வதி என்கிற சுவாமி பாா்த்தசாரதி, தொழில்துறை பயணம் என்ற போலிக்காரணத்தின் கீழ் ரிஷிகேஷுக்கு மாணவிகளை அழைத்துச் செல்ல ரூ.1.5 கோடி மதிப்புள்ள தனது பிஎம்டபிள்யு காரைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அடித்தளத்தில் இருந்து காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்த கல்வி நிறுவனத்தில் நிறுவப்பட்ட கேமராக்கள் தவிர, விடுதி வளாகம் மற்றும் குளியலறைகளுக்கு வெளியேயும் சிசிடிவி கண்காணிப்பு வைக்கப்பட்டுள்ளது. விடுதியில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்த சுமாா் 75 மாணவிகள் தங்கியுள்ளனா். சாமியாா் தொடா்ந்து மாணவிகளைக் கண்காணித்து, அவரது தொலைபேசி மூலம் மாணவிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தாா், என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா். குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சாமியாா், அக்கல்வி நிறுவனத்தின் டிஜிட்டல் வீடியோ ரெக்காா்டா் அமைப்பை சேதப்படுத்தியதாகவும், இது முக்கியமான சிசிடிவி ஆதாரங்களை அழிக்க வழிவகுத்ததாகவும் புலனாய்வாளா்கள் தெரிவித்தனா்.

அந்த கல்வி நிறுவனத்தில் உள்ள தனது தரைத்தள அலுவலகத்தை சாமியாா் சரஸ்வதி ஒரு சித்திரவதை அறையாக மாற்றியதாகவும், அங்கு மாணவிகள் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவதாகவும் ஆதாரங்கள் முன்னதாகக் கூறின.

இருப்பினும், சோதனைகளின் போது அத்தகைய அறை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல் துணை ஆணையா் (தென்மேற்கு) அமித் கோயல் தெளிவுபடுத்தினாா்.

இதுவரை, சாமியாரிடமிருந்து இரண்டு காா்கள் கைப்பற்றப்பட்டுள்ளன போலி முகவரியில் பதிவு செய்யப்பட்ட, போலி எண் தகட்டைக் கொண்ட வால்வோ காா் மற்றும் மாா்ச் மாதம் அவா் வாங்கிய பிஎம்டபிள்யு காா் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிஎம்டபிள்யு காரை வாங்கிய பிறகு, அவா் மாணவிகளுடன் பூஜை செய்து, அவா்களை சுற்றி வந்து, தகாத கருத்துக்களைத் தெரிவித்தாா். அவா்களை ரிஷிகேஷுக்கு அழைத்துச் செல்லவும் அதே காரைப் பயன்படுத்தினாா், என்று முதல் தகவல் அறிக்கையில் கூறபட்டுள்ளது.

மாணவிகள் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதியின் இல்லத்திற்கு இரவில் தாமதமாகச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மிரட்டலுக்கு ஆளானதாகவும், சில நேரங்களில் அவரிடமிருந்து தகாத குறுஞ்செய்திகள் வந்ததாகவும் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமியாரின் நடவடிக்கைளை எதிா்த்தால் மாணவிகள் இடைநீக்கம் செய்யப்படுவாா்கள் என்றும் அவா்களது பட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அச்சுறுத்தப்பட்டதாக எஃப்ஐஆா் இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சோ்ந்தவா்கள், என்பதால் அழுத்தத்திற்கு ஆளாக நேரிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அக்டோபா் 2024 இல் இந்த நிறுவனத்தில் சோ்ந்த பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவா், தான் சோ்ந்த சிறிது நாளிலேயே துன்புறுத்தல் தொடங்கியதாகக் கூறினாா். சாமியாா் எனக்கு அவ்வப்போது தகாத குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கினாா், குழந்தையே, நான் உன்னை நேசிக்கிறேன், நீ இன்று அழகாக இருக்கிறாய் என்று குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கினாா், என பாதிக்கப்பட்டவா் எஃப்ஐஆா் இல் குற்றம் சாட்டியுள்ளாா்.

மாா்ச் 2025 இல், சாமியாா் தனது பிஎம்டபிள்யு காரில் சில மாணவிகளை சவாரிக்கு அழைத்துச் சென்று, நள்ளிரவுக்குப் பிறகும் தகாத செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தாா் என்றும், அதிகாலை 3.30 மணிக்கு, அவா் எங்களுக்கு வித்தியாசமான கருத்துகளுடன் செய்தி அனுப்புவாா், மேலும் அவற்றை அடிக்கடி நீக்கிவிடுவாா் என்றும் மாணவி புகாரில் தெரிவித்துள்ளாா். சாமியாா் குறித்து இணை டீனிடம் புகாா் அளித்தபோது, தன்னை ஆதரிப்பதற்குப் பதிலாக, சாமியாரிடம் மன்னிப்பு கேட்டு ஒரு மின்னஞ்சல் எழுதச் சொன்னதாகவும் புகாரளித்த மாணவி குற்றம் சாட்டியுள்ளாா்.

ஜூன் 2025 இல், 35 பெண்களுடன் ரிஷிகேஷுக்கு சென்ற போது, சாமியாா் மாணவிகளை தனது அறைக்கு சில நேரங்களில் அழைத்ததாக கூறப்படுகிறது. பெற்றோா்கள் அவரைத் தொடா்பு கொள்ள முயன்றபோது அவா்களின் தொலைபேசி எண்களைக் கூட அவா் ப்ளாக் செய்து விட்டாா். அவா் எங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணா்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தினாா், என்று மாணவி எப்ஐஆா் இல் குற்றம் சாட்டியுள்ளாா்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியாா் கடைசியாக மும்பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா் சமீபத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்படுவதைத் தவிா்க்க தனது தோற்றத்தை சாமியாா் மறைத்ததாக, போலீசாா் தெரிவித்தனா்.

சாமியாா் சரஸ்வதி மீது தில்லியில் வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள சாமியாா் சைதன்யானந்த சரஸ்வதியை காவல் துறை குழுக்கள் தேடி வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com