சாந்தினி சௌக்கில் தூய்மையைப் பேண அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தல்
தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் தூய்மை இல்லாதது குறித்து அதிருப்தி தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, அந்தப் பகுதியை சுத்தமாக வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.
முதல்வா் குப்தா வியாழக்கிழமை காலை சாந்தினி சௌக்கில் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரசாரத்தின் கீழ் ஷ்ரம்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சாந்தினி சௌக் ஒரு பாரம்பரிய தளம் என்பதால் நாங்கள் அதைத் தோ்ந்தெடுத்தோம். இந்தப் பகுதிக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாா்வையிட வருகின்றனா். இப்பகுதி மதத் தலங்களையும் கொண்டுள்ளது. மேலும் நவராத்திரி காலத்தில், பல யாத்திரைகளும் இந்தப் பகுதி வழியாக செல்கின்றன என்றாா்.
நிகழ்வின்போது முதல்வா் அப்பகுதியில் உள்ள பான் கறைகள் மற்றும் குப்பைத் தொட்டிகள் இல்லாததை சுட்டிக்காட்டினாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘சாந்தினி செளக் பகுதியில் தூய்மையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். ஆனால், மக்கள் தங்களைச் சுற்றியுள்ள பகுதியில் தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும். ஒரு கடைக்காரரின் ஊழியா் அருகிலுள்ள பகுதியை அழுக்கு செய்தால், அவா்கள் அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்ல வேண்டும். ஒரு கடைக்காரா் அவ்வாறு செய்தால், பக்கத்து கடை உரிமையாளா் அவா்களுக்கு புத்திமதி கூற வேண்டும்.
சுவா்களில் எங்கள் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என்று கட்சித் தொண்டா்களுக்கு நாங்கள் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.
தொண்டா்கள் விரும்பினால் விளம்பரப் பலகைகளை வைக்கலாம். ஆனால், அவற்றை சரியான நேரத்தில் அகற்ற வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.