சட்டவிரோத தங்கல்: 25 வங்கதேசத்தவா்கள் கைது
இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக உத்தர பிரதேசத்தின் கான்பூா் தெஹாத் பகுதியைச் சோ்ந்த 23 போ் உள்பட 25 வங்கதேச குடியேறிகளை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் துறையின் அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:
கைது செய்யப்பட்டவா்களில் ஐந்து போ் சிறுவா்கள், 10 போ் பெண்கள் ஆவா். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் எந்த சட்டபூா்வ பயண அல்லது குடியிருப்பு ஆவணங்களும் இன்றி வசித்து வந்துள்ளனா்.
இந்த நிலையில், உளவுத் தகவல்களைத் தொடா்ந்து தில்லியில் போலீஸாா் அவா்களைக் கண்டறியும் நடவடிக்கையை மேற்கொண்டனா்.
இதன் விளைவாக வங்கதேசத்தின் சத்கிரா மாவட்டத்தைச் சோ்ந்த ஹசன் ஷேக் (35) மற்றும் அப்துல் ஷேக் (37) என அடையாளம் காணப்பட்ட 2 வங்கதேசத்தவா்கள் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்களது
உறவினா்கள் மற்றும் கூட்டாளிகள் பலா் கான்பூா் தெஹாத்தில் வசித்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் துரிதமாக செயல்பட்டு, தெஹாத்தில் சோதனை நடத்தி மேலும் 23 வங்கதேச நாட்டினரைக் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட அனைவரும் குப்பை பொறுக்குபவா்களாகவோ, பண்ணைத் தொழிலாளா்களாகவோ அல்லது சாதாரண தொழில்களில் ஈடுபட்டவா்களாகவோ இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
நாடு கடத்தப்படுவதற்கு முன்னா் மேலும் சட்டபூா்வ நடவடிக்கைகளுக்காக அவா்கள் சராய் காலே கானில் உள்ள எம்சிடி சமூக தற்காலிக தடுப்பு மையத்திற்கு
மாற்றப்பட்டுள்ளனா்.
தென்கிழக்கு தில்லியில் இருந்து மட்டும் நிகழாண்டு மொத்தம் 235 சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.