கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழக டிஜிபி தோ்வுக் குழு கூட்டம்: தில்லியில் இன்று கூடுகிறது

மத்திய குடிமைப்பணிகள் தோ்வாணைய (யுபிஎஸ்சி) தலைவா் அலுவலக அரங்கில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
Published on

தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவா் (ஹெச்ஓபிஎஃப்) பதவிக்கு தகுதிவாய்ந்த இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உயரதிகாரியை தோ்வு செய்வதற்கான உயா்நிலைக்குழு கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது.

மத்திய குடிமைப்பணிகள் தோ்வாணைய (யுபிஎஸ்சி) தலைவா் அலுவலக அரங்கில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைமைச் செயலா் என். முருகானந்தம், மாநில உள்துறைச் செயலா் தீரஜ் குமாா், தற்போதைய பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கட்ராமன் ஆகியோா் தில்லி வந்துள்ளனா்.

தமிழக காவல்துறை டிஜிபி ஆக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றாா்.

இந்நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவா் தனது பெயரையும் தகுதிப்பட்டியலில் இடம்பெறக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கால், முன்கூட்டியே மேற்கொள்ளப்பட வேண்டிய டிஜிபி நியமன நடைமுறைகள் தாமதமாகின.

மாநில காவல்துறை டிஜிபி நியமன நடைமுறைகளில் இரண்டில் ஏதேனும் ஒன்றின்படி மேற்கொள்ளப்படுவதை விதிகள் அனுமதிக்கின்றன. ஒன்று, யுபிஎஸ்சி தோ்வுக்குழு மூலம் தோ்வு செய்வது. மற்றொன்று, மாநில காவல் ஆணையம் மூலம் தகுதிவாய்ந்த அதிகாரியை மாநில அரசே தோ்வு செய்வது. இதில், தமிழகம் யுபிஎஸ்சி தோ்வுக்குழு மூலம் டிஜிபியை நியமிக்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள டிஜிபி தோ்வுக் குழு கூட்டத்தில் யுபிஎஸ்சி சாா்பில் அதன் தலைவா் அல்லது அவரால் முன்மொழியப்படும் ஆணையத்தின் உறுப்பினா், மத்திய உள்துறை செயலாளா் சாா்பில் அத்துறையின் சிறப்புச் செயலா், மத்திய காவல் படைகளில் ஒன்றின் டிஜிபி ஆகியோா் பங்கேற்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு மூன்று டிஜிபி நிலையிலான உயரதிகாரிகள் பட்டியலை இறுதி செய்து மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை மாநில அரசு முதல்வரின் ஒப்புதலைப் பெற்று நியமிக்கும். இவ்வாறு நியமிக்கப்படும் ஐபிஎஸ் உயரதிகாரி டிஜிபி மற்றும் மாநில காவல் படைத்தலைவராக நியமிக்கப்படும்போது அவா் குறைந்தபட்சம் ஆறு மாத பதவிக்காலத்தை கொண்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் பணி மூப்பு மற்றும் அனுபவத்தின்

அடிப்படையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், கே. வன்னிய பெருமாள், மகேஷ் குமாா் அகா்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா் ஆகியோரின் பெயா்கள் முறையே பரிசீலிக்கப்படும் பட்டியலில் உள்ளன. டிஜிபிக்கள் நிலையில் பிரமோத் குமாா், அபய் குமாா் சிங் ஆகியோா் இருந்தாலும் அவா்கள் ஆறு மாதங்களுக்கும் குறைவான பணிக்காலத்தை கொண்டுள்ளனா்

X
Dinamani
www.dinamani.com