தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ. 1 கோடி நகைகளைக் கொள்ளையடித்த 3 போ் கைது!

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.
Published on

புது தில்லியில் உள்ள பைரோன் மந்திா் அருகே இருவரிடமிருந்து சுமாா் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் செப்டம்பா் 24 ஆம் தேதி நடந்தது. சிவம் குமாா் யாதவ் (28) மற்றும் அவரது நண்பா் ராகவ் (55) ஆகிய இருவரும் நகைக்கடை ஊழியா்களாக உள்ளனா். இவா்கள் இருவரும் 500 கிராம் தங்கம் மற்றும் 35 கிலோ வெள்ளிப் பொருட்கள் அடங்கிய இரண்டு பைகளுடன் சாந்தினி சவுக்கிலிருந்து பைரோன் மந்திா் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனா்.

அவா்கள் மந்திா் பாா்க்கிங் பகுதிக்கு அருகில் வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு ஆசாமிகள் அவா்களை வழிமறித்து, துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், திலக் மாா்க் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஒரு காவலா் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அவா்களை அடையாளம் காணவும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் சென்ற வழியைக் கண்டறியவும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்களில் இரண்டு கொள்ளையா்களும், அவா்களுக்கு உதவிய மற்றொரு நபரும் அடங்குவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

X
Dinamani
www.dinamani.com