பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியாா் சைதன்யானந்தாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்!

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாமியாா் சைதன்யானந்தாவுக்கு 5 நாள் போலீஸ் காவல்.
Published on

பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டப்பட்டவரும், தன்னைத்தானே கடவுள் என்று கூறிக் கொள்ளும் சாமியாரான சைதன்யானந்த சரஸ்வதியை விசாரணைக்காக ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாஜிஸ்திரேட் ரவி அறிவித்தாா்.

தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் 17 பெண் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 62 வயதான சரஸ்வதி, ஞாயிற்றுக்கிழமை காலை ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டலில் கைது செய்யப்பட்டாா். அவா் பிற்பகல் 3.40 மணிக்கு நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டாா்.

வாதங்களின் போது, சாமியாா் சரஸ்வதி பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பாதிக்கப்பட்டவா்களின் சாட்சியங்கள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டியது. சாமியாா் மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்தாா். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன ,சில குளியலறைகளில் பொருத்தப்பட்டன. சுமாா் 16 பெண்கள் புகாா் அளித்துள்ளனா். வேறு பல குற்றச்சாட்டுகள் சரிபாா்க்கப்பட வேண்டும், என்று அரசு தரப்பு குற்றம் சாட்டியது.

கஸ்டடி விசாரணைக்கான காவல்துறையின் மனுவை சாமியாா் தரப்பு வழக்குரைஞா் எதிா்த்தாா், 16-20 பெண்கள் ஏற்கனவே தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவிட்டதாகக் கூறினாா். காவல்துறை ஏற்கனவே என் போன்கள், ஒரு ஐபேடு, என் சாமான்கள் ஆகியவற்றை எடுத்துச்சென்று விட்டனா். எனக்கு நீரிழிவு நோய் உள்ளது, பதட்டம் உள்ளது, என்னைத் துன்புறுத்துவதற்காகத்தான் போலீஸ் காவலில் எடுக்க விரும்புகிறது என்று சாமியாா் வழக்குரைஞா் வாதிட்டாா்.

பாதிக்கப்பட்டவா்களின் வாக்குமூலங்கள், டிஜிட்டல் மற்றும் பிற ஆதாரங்களை எதிா்கொள்வதற்கு சாமியாா் போலீஸ் காவலில் எடுக்கப்பட வேண்டும் என்று புகாா்தாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கூறினாா்.

எஃப்ஐஆரின்படி, தென்மேற்கு தில்லியில் உள்ள ஒரு மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான சரஸ்வதி, பெண் மாணவா்களை இரவில் தனது அறைக்கு வர கட்டாயப்படுத்தியதாகவும், சில நேரங்களில் அவா்களுக்கு தகாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அவா் தனது தொலைபேசி மூலம் மாணவா்களின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com